மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றிய பொதுமக்கள்...! அலுவலர்களுக்கு டோஸ் விட்ட தஞ்சை ஆட்சியர்...!
’’முககவசம் அணியாமல் பொதுமக்கள் சுற்றுவது குறித்து சோதனை நடத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு’’
இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொடங்கி 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாடு முழுவதும் 75 வாரங்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தஞ்சாவூர் மணி மண்டப வளாகத்தில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்ட புகைப்படக் கண்காட்சியை விழா நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக, கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில், நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, முறையே முதல் பரிசாக 3000, இரண்டாம் பரிசாக 2000, மூன்றாம் பரிசாக 3000 என குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கு வரைவோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.
கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க, அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டு கொள்வதோடு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற மத்திய-மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார். இதையடுத்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள `கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி’, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எவ்வளவு அவசியம்’ போன்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பார்வையாளர்களுக்கும், மாணவர்கள் அனைவருக்கும் நேரிடையாக சென்று வழங்கினார்.
அப்போது, அனைத்து மாணவர்களும் கட்டாய முககவசம் அணிந்து தான் பள்ளி, கல்லுாரிக்கு வரவேண்டும். நீங்கள் மட்டும் அணிவதோடு, வீட்டிலுள்ளவர்களையும், மற்றவர்களையும் முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும். உங்களை போன்ற இளைஞர்கள் நீங்கள் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என அனைத்து மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பேசினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர், புறப்படுவதற்காக காரில் அமர்ந்த போது, சாலையில் பைக்கில் சென்ற இருவர், முககவசம் அணியாமல் சென்றனர். இதே போல் பலரும் சென்றதால், நகர நல அலுவலரை, அழைத்து, மாஸ்க் அணியாமல் பைக்கில் எத்தனை பேர் செல்கிறார்கள் என்று பாருங்கள். அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என சோதனை நடத்தி அறிவுறுத்துங்கள். இனிமேல் இது போல் நடைபெறாமல் பார்த்து கொள்ளவேண்டும் என கடுமையாக சாடினார். இதற்கு பதிலளித்த நகர நல அலுவலர் நமச்சிவாயம், மணி மண்டபம் முகப்பில், சுகாதாரத்துறையினரை, சோதனை செய்வற்காக உள்ளனர். இவர்கள் அலுவலர்களுக்கு ஏமாற்றி விட்டு வந்து விடுகிறார்கள் என்று பதிலளித்தார்.
இந்த கண்காட்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல் போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி கண்காணிப்பாளர் கிளமென்ட், நகர் நல அலுவலர் நமச்சிவாயம், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் ஆனந்த பிரபு, தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் திரு எம்.சீராளன், மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி வரும் 9ஆம் தேதி வரை காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இலவசமாக இந்தக் கண்காட்சியைப் பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.