ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை - தஞ்சை மேயர்
தஞ்சாவூர் மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண். ராமநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பழைய பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்டப்பட்டது. மேலும் திருவையாறு பஸ் ஸ்டாண்டாக இருந்த இடம் வணிக வளாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பழைய மாநகராட்சி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. சாலைகள் மேம்பாடு உட்பட பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 2023, மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, இப்பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் திட்டம் இரு மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சிவகங்கை பூங்காவில் புனரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், இரு மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் போக்குவரத்து சிக்னல் பிரச்னை தொடர்பாக இரு நாள்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலக மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
மாநகரில் தற்போதுள்ள குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 20.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது. இப்போது, பொலிவுறு நகரத் திட்டத்தின் மூலம் மேலும் 18 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் இரண்டாவது திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், கொள்ளிடம் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூருக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பள்ளியக்ரஹாரம் நீரேற்று நிலையத்திலிருந்து மாநகருக்கு இணைப்புக் கொடுக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி முடிவடைந்தவுடன் பழைய நகரப் பகுதியான 25 வார்டுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும்.
இந்த மாநகராட்சியுடன் 2024 ஆம் ஆண்டில் சுற்றியுள்ள 13 ஊராட்சிகள் சேர்க்கப்படவுள்ளன. இதையும் கருத்தில் கொண்டு மேலும் 18 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் விதமாக மூன்றாவது திட்டப் பணியும் கொள்ளிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரிவாக்கப் பகுதிகளுக்கும் குடிநீர் பிரச்னை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 190 கோடி மதிப்பில் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.