மேலும் அறிய
ஆட்சியருக்கு அவரது புகைப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய மாணவி!
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வரைந்த ஓவியத்தை அனுப்பி உள்ளார். அதைப் பார்த்த ஆட்சியர் மாணவிக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியதுடன் அவர் அனுப்பிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாணவி வரைந்த கலெக்டர் போட்டோ
ஆட்சியருக்கு அவரது புகைப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய மாணவி. மாணவி வழங்கிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இரண்டு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் வீட்டிலேயே இருந்தபடி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பல சிறுவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். ஏற்கனவே திருவாரூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கையடக்க சிபியு கண்டுபிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் உள்ளிட்ட பல நபர்களிடம் பாராட்டுகளை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி தனது ஓவியத் திறமையை பறைசாற்றும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்களின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்து அதனை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் எண் மூலமாக அனுப்பி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் அனிதா தம்பதியினர். இவர்களுக்கு 14 வயதில் தமிழினியா என்கிற குழந்தையும், 10 வயதில் துவாரகா என்ற குழந்தையும் உள்ளனர். தந்தை விஜயகுமார் மன்னார்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் அனிதா மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருடைய இரண்டாவது மகள் துவாரகா சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளார். பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் கார்ட்டூன் சேனல்களில் வருவதைபோல் கார்ட்டூன்களை வரைந்து அசத்தி வந்துள்ளார் துவாரகா.

மேலும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருந்து வந்த துவாரகா பரவை ஸ்ரீ தயா என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து கார்ட்டூன் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோவிற்கு மாணவி துவாரகாவே பின் ஒலியும் கொடுத்துள்ளார். இந்த சேனலுக்கு 183 பேர் விருப்பம் தெரிவித்து லைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட மாணவி துவாரகா அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கூகுள் மூலமாக பதிவிறக்கம் செய்து அவரை ஓவியமாக வரைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்களுடைய வாட்சப் எண்ணிற்கு தான் வரைந்த ஓவியத்தை அனுப்பி உள்ளார். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாணவிக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியது உடன் அவர் அனுப்பிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் மாணவி அனுப்பிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஏராளமான நபர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் முகநூல் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு





















