மாணவி தற்கொலை வழக்கு: தஞ்சாவூர் வந்த NCPCR குழு; பிரியங்க் கனுங்கோ மாவட்ட அதிகாரிகளிடம் விசாரணை!
NCPCR குழு இறந்த மாணவி மற்றும் அவரது வகுப்புத் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களையும், சிகிச்சை அளித்த மருத்துவர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் சந்திக்கும் என்று தெரிகிறது.
தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனுங்கோ தஞ்சாவூர் மாவட்ட அதிகாரிகளுடன் சந்தித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை வழக்கை விசாரிக்க ஆணையத் தலைவர் பிரியங்க் கனுங்கோ ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தஞ்சாவூருக்கு வருகை தருவதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியிருந்தது.
பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அது குறித்த வீடியோவும் பின்னர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
NCPCR chairperson Priyank Kanoongo holds inquiry with #Thanjavur district official regarding the death of a student pic.twitter.com/qJ6J5Jg8bm
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) January 31, 2022
இந்த வழக்கை விசாரிக்க என்சிபிசிஆர் குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி மு.க.ஸ்டாலின் அரசு தனது இயலாமையை வெளிப்படுத்தியதாகவும் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனாலும் ஆணையக்குழு தஞ்சாவூர் வருவதில் மாற்றம் இல்லை என்று அறிவிதிருந்தனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் வந்திருந்த பிரியங்க் கனுங்கோ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரியும் அங்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டிருந்தார், அதன்படி இந்த விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், NCPCR குழு இறந்த மாணவி மற்றும் அவரது வகுப்புத் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்திக்கும் என்று தெரிகிறது. இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் அவர் சந்திப்பார். அங்குள்ள உள்ளூர் நபர்கள் யாராவது ஆணையத்தை சந்திக்க விரும்பினால், குழு அவருடனும் பேசும்.