சேலத்தில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா - பரிசுகளை அள்ளிய தஞ்சை மாணவர்கள்
’’கலாஉத்சவ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை வென்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பாராட்டு’’
தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் நமது பாரம்பரிய கலைகளை இளம் தலை முறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து வகையான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கலா உத்சவ் (கலைத்திருவிழா) போட்டிகள் நடைபெற்றது. இதில் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை வாசித்தல், நாட்டுப்புற கிராமிய, செவ்வியல் நடனம் மற்றும் காண்கலை இரண்டு, மூன்று பரிமாண ஓவியங்கள், சிற்பம் செய்தல், பொம்மைகள் செய்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு தனி தனியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் வழிகாட்டுதலின்படி மாவட்ட அளவிலான கலா உத்சவ் (கலைத்திருவிழா) போட்டிகள் 25.10.2021 மற்றும் 26.10.2021 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
அந்த போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றிபெற்ற 18 மாணவ மாணவிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். 9 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 37 மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான போட்டிகளில் நமது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள், இதுவரை இல்லாத அளவில், முதன் முறையாக, இந்த ஆண்டு மாநில அளவில் 6 பிரிவுகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். காண்கலை-பொம்மைகள் செய்தல் பிரிவில் மாரியம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சரண் முதல் பரிசும், கருவி இசை வாசித்தல் பிரிவில் கும்பகோணம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் பாரதிராஜா இரண்டாம் பரிசும், செவ்வியல் நடன பிரிவில் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரவிச்சந்திரன் இரண்டாம் பரிசும், பட்டுக்கோட்டை ஃபைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ கங்கைஸ்ரீ மூன்றாவது பரிசும், நாட்டுப்புற நடன பிரிவில் ஆதனகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சரண்யா மற்றும் தஞ்சாவூர், கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவன் நாகார்ஜுன் மூன்றாம் பரிசுகளையும். பரிசுகோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் பெற்றனர்.
இதில் மாநில அளவிலான போட்டியில் காண்கலை பொம்மைகள் செய்தல் பிரிவில் முதல் இடம்பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சரண் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். மாவட்ட அளவில் முதல் இடம்பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசுக்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கவும் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தும், பாராட்டு விழாவும் தஞ்சாவூர், புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்து, மாவட்ட அளவில் கலாஉத்சவ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கியும், அவர்களை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவ மாணவர்களுக்கு வழிகாட்டிய கல்யாண சுந்தரம் மேல்நிலைப்பள்ளி கலை ஆசிரியர் ரவீந்திரன் அவர்களையும் வாழ்த்தி பாராட்டினார். இவ்விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.