தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவ புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடக்கம்
’’காலை 10 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும், மருந்துகளுக்கு மட்டும் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது’’
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டது. இதில், பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது கலைப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்ப்பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது சுவடிப்புலம். இப்புலத்தின்கீழ், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச்சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆகிய நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். அறிவியற் புலமாகும். இதன்கீழ், சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல்துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை என இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.
இத்தகைய புகழ்பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை வளாகத்தில், தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவை பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறுகையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் அரண்மனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் செயல்படாமல் இருந்த இந்த பிரிவை, மருத்துவக் கல்லூரி சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான மூலிகை பண்ணை அமைந்துள்ள வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வில்வையா சாம்பசிவம், 25 ஆண்டுகள் உழைத்து மருத்துவத்திற்கான தமிழ் – ஆங்கில அகராதியை (Tamil - English Dictionary of Medicine, Chemistry & Allied Sciences based on Indian Medicines) நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் 80,000 தலைச்சொற்களை கொண்டு உருவாக்கி, அதை அவர் காவல்துறையில் பணியாற்றி கிடைத்த ஓய்வூதியம் மற்றும் அவரது சொத்துக்களை விற்று பெற்ற தொகையைக்கொண்டு தனது வாழ்நாளில் இரண்டு தொகுதிகளாக 1938 ஆம் ஆண்டு வெளியிட்டார். அடுத்தடுத்த மூன்று தொகுதிகள் 1970களில் தமிழக அரசின் உதவியுடனும், கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு உதவியுடனும் வெளிவந்தன.
ஒரு குறிப்பிட்ட பொருண்மை பற்றிய சிறப்பகராதியை தமிழில் தயாரித்த முன்னோடி. பல ஆண்டுகள் தனி மனிதனாக உழைத்து இவ்வகராதியை உருவாக்கியுள்ளார். சித்த மருத்துவ கல்லூரிகளில் முதன்மையாக பயன்படும் இந்த அகராதியை மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரால், பாராட்டி தனது அகராதியிலும் பயன்படுத்தினார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு த.வி.சாம்பசிவம் அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
சாம்பசிவம், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கம்மந்தங்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களுருவில் 1880 ல் பிறந்து, அங்கேயே கல்வி பயின்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி 1935இல் காவல்துறைஆய்வாளராகப்பணிஓய்வுபெற்றார். இத்தகைய சிறப்பு பெற்ற, சாம்பசிவம், சித்த மருத்துவத்தில் தமிழ், ஆங்கில அகராதியை உருவாக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வி.சாம்பசிவம் அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சித்த மருத்துவ பிரிவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் இதற்காக மூன்று மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருந்துகளுக்கு மட்டும் ரூ.10 வசூலிக்கப்பட உள்ளது. நோயாளிகள் வருகை அதிகரித்தால், சனி, ஞாயிறு கிழமைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில், பதிவாளர் கோவை மணி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இரா.காமராஜ், ரெ.நீலகண்டன், கு.சின்னப்பன், மருத்துவர் து.மாண்டெலா மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.