(Source: ECI/ABP News/ABP Majha)
கும்பகோணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 400 ஆண்டுகள் பழமையான கோயில் இடம் மீட்பு...!
நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதை அறிய உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க அறநிலையத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி தெற்குதெரு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகேஸ்வரன் கோயிலின் இணை கோயிலான நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக சிலர் கூரை, ஓட்டு வீடுகளை கட்டி வசித்து வந்தனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 21,463 சதுரடி நிலம் உள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை அமைந்துள்ள இந்த இடத்தை 16 பேர், கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வீடு, டீக்கடை, பெட்டி கடைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மாசி மகாமகத்தின் போது, மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கோயில் இடத்திலேயே வசித்து வந்தனர். இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தொடர்ந்து, கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், மேலக்காவேரி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகள் மற்றும் கடைகளை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த அதிரடியாக அகற்றினர். தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் மின் வாரிய ஊழியர்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதையொட்டி ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கோயிலில் கடந்த 2016ஆம் ஆண்டு மாசி மகாமகத்தின் போது பணிகள் நடைபெற்று கிடப்பில் போடப்பட்டன. அனைத்து பணிகளும் சிதிலமடைந்து விட்டது. கோயில் வளாகம் முழுவதும் முட்செடிகள், கொடி மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இக்கோயில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது தெரியாமல் உள்ளது. உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். எனவே, அறநிலையத்துறையினர் உடனடியாக நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.