தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை கைவிட வலியுறுத்தி தீர்மானம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூா்: தஞ்சையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் காதர், அதிராம்பட்டினம் நகர துணைத் தலைவர் பைதுல் ரகுமான் ஆகியோர் தலைமை தாங்கினர் . மாநில அரசியல் கவுரவ ஆலோசகர் அப்துல்ரவூப் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் இம்தியாஸ்அஹமது, துணைத்தலைவர் அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயினுல் ஆபீதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தலைநகர் சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் இல்லம் மற்றும் நெல்லையில் காயிதே மில்லத் பெயரால் அறிவுலக நூலகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிப்பது ஜனவரி 28ம் தேதி நடைபெற இருக்கும் மஹல்லா ஜமாத் மாநில மாநாட்டிற்கு தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் 200 நபர்களை சேர்ப்பது, அனைத்து மஹல்லா ஜமாத்தினரை நேரில் சந்தித்து அழைப்பது.
குறைந்தது 2000 நபர்களை மாநாட்டில் பங்கேற்கும் வகையில் களப்பணி செய்வது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற தேர்தல் பணி செய்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அபுசாலிஹ் நன்றி கூறினார்.





















