2798.75 கோடியில் நடக்கும் கல்லணை கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்க கோரிக்கை
’’எடப்பாடி அரசு தனது ஆட்சியின் பதவிக்காலம் முடியும் தருவாயில் இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதிலிருந்து, ஒப்பந்த பணிகள் வழங்கும் வரை தனக்கு வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கே ஒதுக்கியுள்ளார்’’
கல்லணை கால்வாயில் 2798.75 கோடி மதிப்பில் நடைபெற்றும் வரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் எனவும் பணிகளுக்குரிய தொகையினை, நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் நசுவினி ஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணையிலிருந்து 3.10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு புதிய நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டும் திட்டத்தின் ஒரு அங்கமாக கடந்த 1928 முதல் 1934 வரை ஏற்படுத்தப்பட்டது தான் கல்லணை கால்வாய் பாசன திட்டமாகும். இக்கால்வாய் கொள்ளளவு 4200 கன அடி ஆகும். கல்லணையிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் 109 கிலோமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 39.654 கிலோமீட்டர் என மொத்தம் 148. 654 கிலோமீட்டர் கல்லணை கால்வாய் தண்ணீர் செல்கிறது. கல்லணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் இறுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மும்பாலை ஏனும் ஏரியில் சேர்கிறது. கல்லணை கால்வாய் மற்றும் அதன் கிளை ஆறுகள் மூலம் 2,27,472 ஏக்கர் நிலங்களுக்கும், இரண்டு மாவட்டங்களில் உள்ள 694 ஏரிகளில் நீர் நிரபப்பபட்டு அதன் மூலம் 81,942 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.
கல்லணை கால்வாய் அமைக்கப்பட்டு சுமார் 85 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆற்றின் கரைகள் பலவீனமடைந்தது கால்வாய் உள்ள நீர் தேக்கி, நீர்ரொழுங்கி, மதகுகள், கால்வாயில் படுக்கைகள் மற்றும் சாய்வு தளம், நீர்க்குமிழி சிதிலமடைந்து காணப்படுவதனால் தண்ணீர் செல்வது தடை ஏற்பட்டது. இதனையடுத்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில் ஆகிய தாலுகாவில் உள்ள நிலங்களுக்கு காவிரி நீர் சென்று அடைவதில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் மேட்டூர் அணை பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ல் திறக்கப்பட்டு ஜனவரி 28ல் நீர் திறப்பு நிறுத்தப்படும் வரையிலான காலத்தில் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். இப்போது தண்ணீர் வராததால் கடைமடை பகுதி விவசாயிகள் ஒரு போகம் நெல் சாகுபடி மட்டும் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கல்லணை கால்வாய் ஏற்படுத்தப்பட்டு 85 ஆண்டுகள் ஆன நிலையில் இக்கால்வாய் பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு புதுப்பிக்கக் கோரி விவசாயிகள், தமிழகஅரசிடம் பல முறை கோரிக்கை வைத்து அடிப்படையில், தற்போது கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இத்திட்டத்திற்கான நிதியை சீன நாட்டின் தலைநகரமான பீஜிங் நகரில் உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் 2798.75 கோடி ரூபாய் கடன் பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி 1036.70 70 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு ஐந்து பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தங்களை முன்னாள் முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு வேண்டிய கட்டுமான நிறுவனங்களான, ஈரோட்டை சேர்ந்த அன்னை இன்பரா கட்டுமான நிறுவனம் என இரண்டு நிறுவனங்களுக்கும், ஆர்.பி.பி கட்டுமான நிறுவனம், ரினாட்டஸ் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் நாமக்கல் பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் ஆகிய தனக்கு வேண்டிய ஐந்து நிறுவனங்களுக்கு 1036.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை, கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
எடப்பாடி அரசு தனது ஆட்சியின் பதவிக்காலம் முடியும் தருவாயில் இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதிலிருந்து, ஒப்பந்த பணிகள் வழங்கும் வரை தனக்கு வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கே ஒதுக்கி வழங்கியுள்ளார். இப்பணிகளை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்டி நிறுவனம் ஏற்கனவே செய்துள்ள பணிகளான, குடியிருப்பு வீடுகள், பாலங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து வருகிறது. சட்டமன்றத்திலும் இந்த நிறுவனம் தொடர்பான விவாதங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கல்லணை கால்வாய் ஈஆர்எம் திட்டத்தில் இந்த நிறுவனத்தால் செய்யப்பட்ட கட்டுமானங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருந்ததால், இந்த ஆண்டு பாசனத்திற்கு ஜூன் 16 ஆம் தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் கல்லணை கால்வாயின் தலை வாய்க்கால் பகுதிகளில் செய்யப்பட்ட பணிகளில், பக்கவாட்டு சுவர்கள் அனைத்தும் தெறித்தும், உடைந்து போய்விட்டது. ஆனால் ஆற்றில் தண்ணீர் செல்வதால், தரை தளப்பணிகளை பார்க்க முடியவில்லை.
எனவே தமிழக முதல்வர் இத்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் முதல் தற்போது செயல்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு ஒரு வல்லுனர் குழுவை அமைப்பதுடன், இத்திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளுக்குரிய தொகையினை, நிறுத்தி வைக்கவும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சேரும் வகையில் இத்திட்டத்தினை தொடர்ந்து நல்ல முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர், திருச்சி தலைமை பொறியாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் தனது கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.