குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி
குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதியில் சுந்தரம் மீனா நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
குடியிருப்பில் புகுந்த மழை நீர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் அலுவலகத்திற்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வழியாக விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 வருடங்களாக மழை பெய்தால் இதே பிரச்சினை சந்தித்து வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்னை மரம் சாய்ந்தது
தஞ்சை பள்ளியக்ஹாரம் பகுதியில் டிட்வா புயல் காரணமாக முறிந்து விழ இருந்த தென்னை மரத்தினை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர். தென்னை மரம் கீழே விழுந்ததும் மரத்தில் இருந்த இளநீர் காய்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பறித்து சென்றனர்.
தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள அருள்மிகு நீலமேக பெருமாள் கோயிலில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இங்குள்ள தென்னை மரம் ஒன்று டிட்வா புயல் காரணமாக வேரோடு சாய்ந்து எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி போக்குவரத்தை வேறு திசையில் மாற்றம் செய்து அனுப்பினர். தென்னை மரம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழலாம் என்ற நிலை இருந்தது. இதனால் அப்பகுதியில் யாரும் செல்லாமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்பாக அப்பகுதியில் நின்றிருந்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாவகமாக பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் எந்தவித சேதம் ஏற்படாத வகையில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் லாவகமாக மரத்தை கீழே சாய்த்தனர். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் மரம் கீழே விழுந்ததும் வேகமாக ஓடிச் சென்று போட்டி போட்டுக் கொண்டு மரத்தில் இருந்த இளநீரை எடுத்துச் சென்றனர். இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மரத்தை வெட்டி அகற்றிய தீயணைப்புத்துறையினரை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.




















