மயிலாடுதுறையில் மழை: மகிழ்ச்சியில் சம்பா விவசாயிகள்...! கவலையில் குறுவை விவசாயிகள்...!
’’சம்பா சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை’’
தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மின கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் எனவும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றை முன்தினம் இரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மூங்கில் தோட்டம், மன்னம்பந்தல், வடகரை, அன்னவாசல், கழனிவாசல், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் பலத்த மழை விட்டு விட்டு அவ்வப்போது பெய்து வருகிறது. சம்பா சாகுபடி செய்வதற்காக நிலத்தை தயார் படுத்தி வரும் விவசாயிகளுக்கு இந்த மழை உகந்தது என்பதால் அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் குறுவை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனைக்காக அடுக்கி வைத்திருக்கும் விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் என்பதால் கவலையடைந்துள்ளனர். மேலும் தங்களை காக்க வைக்காமல் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் முன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.