பிரமாண்டமான ஊர்வலம்... யானை மீது பவனி வந்த புனித கலச தீர்த்தங்கள்: எங்கு? எதற்காக?
யாகசாலை பூஜை தொடங்குவதை முன்னிட்டு வடவாற்றில் இருந்து புனித நீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக யாகசாலை பூஜை தொடங்குவதை முன்னிட்டு கோயில் அருகில் உள்ள வடவாற்றில் இருந்து புனித கலச தீர்த்தங்கள் யானைகள் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை அருகே உள்ள புன்னநைல்லூர் மாயரிம்மன்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களுள் இந்த கோயிலும் ஒன்று.

இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். இதற்காக முதல் நாள் நள்ளிரவு முதலே பக்தர்கள் நடந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இங்குள்ள மூலவரான அம்மன் புற்றுமாரியம்மன் ஆகும். இந்த அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும்.
இந்த கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 10ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை, தீர்த்த ஸங்கிரஹணம், பரிவாரம் மூர்த்திகள் கலாகர்ஷ்ணம், யாகசாலை அலங்காரம், அக்னி சங்கிரகணம் நடைபெற்றது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடைபெற உள்ளது.

குடமுழுக்கு விழாவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் மாரியம்மன் கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன . கோயில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
யாகசாலை பூஜை இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு வடவாற்றில் இருந்து புனித நீர் எடுத்து அது யானை மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக பின் தொடர்ந்து வந்தனர். அப்போது கோலாட்டம், கும்மியாட்டம், தாரை தப்பட்டை முழங்கப்பட்டது. இந்தப் பிரமாண்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மிகவும் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.
குடமுழுக்கையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் உள்ள கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணியும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அம்மன்கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள் பொருத்தப்பட்டன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்பட்டன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து வரும் 10ம் தேதி குடமுழுக்கு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





















