இனிமே இதுதான் என்னோட கெட்டப்... சப்-இன்ஸ்பெக்டர் அட்வைஸால் மாறிய மாணவர்
அறிவுரையால் ஈர்க்கப்பட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆர்யா என்ற கல்லூரி மாணவர் தானாகவே மனம் மாறினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகரை மாணவர் ஆர்யா சந்தித்துள்ளார்.

புதுக்கோட்டை: இது எப்படி இருக்கு... இனிமே இப்படியேதான் “கட்” செய்ய போகிறேன் என்று புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் கொடுத்த இன்ப ஷாக் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது புதுக்கோட்டை போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகர் என்பவர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையாக தலை முடியை வெட்டிக் கொள்ள வேண்டும். முடியை காடு போல் வளர்க்க கூடாது. உங்களை யாராவது பார்த்தால் அவர்களுக்கு உங்கள் மீது மரியாதை ஏற்பட வேண்டும். அதுபோன்று உங்கள் தோற்றம் இருக்க வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறினார்.
இந்த அறிவுரையால் ஈர்க்கப்பட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆர்யா என்ற கல்லூரி மாணவர் தானாகவே மனம் மாறினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகரை மாணவர் ஆர்யா நேரில் சந்தித்துள்ளார். என்னப்பா விஷயம் என்று சப்-இன்ஸ்பெக்டர் அழகர் கேட்க, அவருக்கு மாணவர் ஆர்யா அளித்த பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது. 'உங்களது அறிவுரை எனக்கு பிடித்துள்ளது. அதனால் எனது தலைமுடியை முறையாக வெட்டிக் கொள்கிறேன்' என்று கூறி திக்குமுக்காட வைத்து விட்டார்.
மாணவர் ஆர்யாவின் சொன்னதை கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த அவர், மாணவரே தானே முடியை திருத்தம் செய்ய முன்வந்த நிலையில், அந்த மாணவனை உடனடியாக அருகில் உள்ள முடி திருத்தம் செய்யும் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மாணவனுக்கு முறையாக தலைமுடியை வெட்ட வைத்தார்.
அதன்பிறகு அந்த மாணவர், 'தொடர்ந்து இதுபோல் நாகரிகமாக முடிவெட்டிக் கொள்கிறேன். வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்கு உரிய விசயத்தை செய்ய முயற்சிக்கிறேன்' என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் அழகரை நெகிழச் செய்து விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டரின் அறிவுரையைக் கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் நாகரிகமாக முடிவெட்டிக் கொண்ட சம்பவம், அங்கு உள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

