நீட் தேர்வில் 2 ஆண்டுகள் தோல்வியடைந்ததால் விரக்தியில் மாணவர் தற்கொலை
இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்த நிலையில் பெற்றோர் மீண்டும் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பம் செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: பிடித்த படிப்பு மருத்துவம்... பெற்றோர் விருப்பமோ இன்ஜினியரிங். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்த நிலையில் பெற்றோர் மீண்டும் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பம் செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிலம்பவேளாங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களின் இரண்டாவது மகன் தனுஷ் (20). இவர் கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்தார். சிறுவயதில் இருந்தே தனுஷிற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிளஸ் 2 முடித்த நிலையில் தனுஷ் மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் தனுஷின் பெற்றோருக்கோ இன்ஜினியரிங் படிக்க வைக்க விருப்பம். இதனால் தனுஷை அவரது அப்பா செந்தில்குமார் கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பாடப்பிரிவில் சேர்த்து விட்டுள்ளார். படிக்க விரும்பியதோ மருத்துவம், ஆனால் பெற்றோரோ இன்ஜினியரிங் படிப்புக்கு சேர்த்து விட்டதால் விருப்பமே இல்லாமல் இருந்துள்ளார் தனுஷ். விருப்பமில்லாத இன்ஜினியரிங் பாடத்தை படிக்க பிடிக்காத தனுஷ் ஒரே மாதத்தில் கல்லுாரியிலிருந்து வெளியேறி தன் ஊருக்கு வந்து விட்டார்.
இதையடுத்து தனுஷ் 2022 மற்றும் 2023ம் ஆண்டு வீட்டில் இருந்தபடி, நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி உள்ளார். ஆனால் தேர்வில் தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து 2 ஆண்டுகள் நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நடந்த நீட் தேர்வை தனுஷ் எழுதவில்லை. இதையடுத்து தனுஷின் பெற்றோர், மருத்துவம் படிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கி விட்டாய். இனி மருத்துவம் படிக்க வேண்டாம், இன்ஜினியரிங் படி என்று கண்டித்துள்ளனர். தொடர்ந்து இன்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த தனுஷ் இரு நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இல்லாத போது, உத்திரத்தில் சேலையால் துாக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் தனுஷ் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவம் படிக்க முடியாத நிலையில் மாணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பணியாற்றக் கூடிய மொத்த மருத்துவர்களில், எட்டில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இந்திய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 12 சதவீத மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தே உருவாகிறார்கள்" இப்படி கடந்த ஜூலை 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசிய இதே ஆண்டில்தான், ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா எனும் மூன்று மாணவிகளை, தமிழ்நாடு 'நீட்' தேர்வுக்கு பலி கொடுத்தது.
அனிதா முதல் ஊரப்பாக்கம் அனு வரை பலரது வாழ்விலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தேர்வுமுறை என்றால் மிகையில்லை. சமீபத்தில் நீட் தேர்வுக்கு பலியான தனுஷ், கனிமொழி, சவுந்தர்யா ஆகியோரின் மரணங்கள், நீட் தேர்வுமுறையை நோக்கி ஆழமான விவாதத்தை பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது.