தமிழக அரசு நடவடிக்கையால் வரும் 26ம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைப்பு: பி.ஆர்.பாண்டியன்
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வரும் 26ம் தேதி நடக்க இருந்த முழு அடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.
தஞ்சாவூர்: தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வரும் 26ம் தேதி நடக்க இருந்த முழு அடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார் தலைமை வகித்தார். திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் போராட்டக்குழுத் தலைவர் முருகேசன், ஏகேஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்துக்கு பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீரை உடனடியாக பெறுவதற்கு தமிழ்நாடு அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும்.
ஆணையம் மறுக்கும் பட்சத்தில் ஆணையம் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்ததோடு, ஆணையம் மத்திய அரசின் உதவியை பெற்று கர்நாடகாவில் இருந்து ஜூன், ஜூலை மாதத்திற்கான 44 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி நீரும், 18 டி எம் சி தண்ணீருக்கு அனுமதி வழங்கி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ந்தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு செய்து இருந்தோம்.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் இந்த போராட்ட அறிவிப்பின் நோக்கத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், ஆணையத்தை அவசரமாக கூட்டி உரிய தண்ணீரை பெறுவதற்கு கடிதம் எழுதி இருக்கிறார். உடனடியாக அனைத்துக் கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். தற்போது அந்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் முடிவடைந்திருக்கிறது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் முழுமையாக வரவேற்கிறது. குறிப்பாக அவசரமாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்று முடிவு எடுத்துள்ளார்கள். மத்திய அரசை ஆணையம் மூலம் தண்ணீரை பெற்றுத் தருவதற்காக வலியுறுத்தலையும் உருவாக்கி இருக்கிறது. இப்படி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது தமிழ் நாட்டில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.
இருப்பினும் மத்திய அரசு இந்த காவிரி பிரச்சனைக்குள் தானாக நுழைய முடியாது. அதற்கான அனுமதி உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தான் தண்ணீரை பகிர்ந்தளிக்க கூடிய முழு அதிகாரம் படைத்த அமைப்பு.
காவிரி குறித்த சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இருக்குற கிளை நதிகள், காவிரியாறு, அணைகள் அந்தந்த மாநிலங்களுக்கு சொந்தம். ஆறுகளில் வரக்கூடிய தண்ணீரும், அணைகளில் இருக்கக்கூடிய தண்ணீரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நீர் நிர்வாக முறை முழுமையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிது. எனவே கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீரை விடுவிக்க மாட்டேன் என்று முடிவெடுப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். அதே நேரத்தில் கர்நாடகத்தின் முடிவும் ஏற்றத்தக்கது அல்ல.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒவ்வொரு மாநிலமும் தன் விருப்பத்தை முறையிடலாம். காவிரி மேலாண்மை ஆணையம் தான் இருக்கும் தண்ணீரை கணக்கிட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எப்படி பிரிந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆணையம் தன் பொறுப்பை தட்டிக்கழித்தால் ஆணையத்தின் மீதும் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏற்று வருகிற 26 ந்தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு, ரயில் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டத்தில் மட்டுமின்றி கோயம்முத்தூர் மாவட்டத்திலும் தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ரூ.5, ரூ.4க்கு ஒரு தேங்காய் விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மது காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10க்கு விலை வைத்து பெற்று கொள்ளும் அரசாங்கம் கஷ்டப்பட்டு 20 ஆண்டுகள் தென்னையை வளர்த்து அது காய்ப்புக்கு வருகிறது. ஆனால் தேங்காய் ரூ.4 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் நல்லெண்ணெய்யை பொது வினியோக திட்டத்தில் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இதனால் விவசாயிகள் லாபம் பெற முடியும். புற்றுநோயை உருவாக்கக்கூடிய பாமாயிலுக்கு தடை விதிப்பதன் மூலம் மக்களையும் பாதுகாக்க முடியும்.
எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும். கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக தடையில்லாமல் கள் இறக்குமதி செய்ய இறக்கி அதனை விற்பனை செய்து வந்தார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்குப் பிறகு சமூக விரோதிகளுடன் தென்னை விவசாயிகளை இணைத்து வழக்கு போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
10 ஆண்டுகளாக கள் தடையில்லாமல் விற்பனை செய்வதை அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் சட்டப்படி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் தடை இல்லாமல் வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதித்த போது உணவுப் பொருளான கள்ளை தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்றால் கேரளாவில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி. சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.