மும்முரம்... வெகு மும்முரம்: தஞ்சாவூரில் பொங்கல் பானைகள், மண் அடுப்பு தயாரிக்கும் பணி விறுவிறுப்பு
பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பொங்கல் பானைகள், மண் அடுப்பு தயாரிக்கும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழர்களின் பண்டிகைகளுள் மிக முக்கியமான பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். இந்த பண்டிகையை தமிழர் திருநாளாக தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 21 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாகவும், மறுநாள் மாட்டுப் பொங்கல் பண்டிகையும், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை அன்று அதிகாலையில் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் மண்பானையில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பது வழக்கம். இந்த பொங்கல் படையலில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், இஞ்சி கொத்து ஆகியவையும் இடம்பெறும்.
இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், சாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அதன்படி தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய பொங்கல் மண்பானைகள், பொங்கல் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் முன்பெல்லாம் திரும்பிய திசையெங்கும் கால் வைத்து நடக்க முடியாத அளவிற்கு பொங்கல் பானைகள், மண் அடுப்புகள் தயாரித்து தெருக்கள் முழுவதும் காயவைத்து இருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் தயாரித்து வருகின்றனர். இங்கு தயார் செய்யும் மண்பானைகள், அடுப்புகளை பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகவும் அனுப்பி வைக்கிறார்கள்.
இது குறித்து பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் மண்பானை,பொங்கல் மண் அடுப்புகள் தயார் செய்து வருகிறோம். இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வந்தோம். எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகிறோம்.
பாரம்பரிய தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம். வருமானம் ரொம்ப குறைந்து போய் விட்ட காரணத்தால் அனைவரும் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். மேலும் பானைகள், அடுப்புகள் செய்வதற்கு மண் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. பொங்கல் பானை, அடுப்புகளை சுடவைப்பதற்காக வைக்கோல் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது இன்று 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
1000 ரூபாய்க்கு விற்ற தென்னை மட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மேலும் தற்போது பொதுமக்கள் பித்தளை, அலுமினிய பாத்திரங்களில் பொங்கல் வைக்கிறார்கள். இது போன்ற பொருட்களை தவிர்த்து பொங்கலுக்கு மண்பானை, மண் அடுப்பு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில்தான் உள்ளது.
அடுத்த தலைமுறைக்கு பொங்கல் பானை, மண் அடுப்பு செய்ய ஆட்களே இருக்காது. மேலும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தொழில் மையம் அமைத்து தர வேண்டும். மண் பாண்டங்களை காய வைப்பதற்கு அமைக்க இடம் ஒதுக்கி செட் அமைத்து தர வேண்டும். மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















