Pongal 2025: தமிழர் திருநாளாம் பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாடிய தஞ்சை மாநகர திமுக
தஞ்சை மாநகர திமுக செயலாளரும் மேயருமான சண்.இராமநாதன் ஏற்பாட்டில் , அருளானந்தம் நகரில் உள்ள மாநகர திமுக அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சை மாநகர திமுக அலுவலகத்தில் புலியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் தமிழர் திருநாளாம் சமத்துவ பொங்கல் விழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2 ஆம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3வது நாள் காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், பயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தஞ்சை மாநகர திமுக செயலாளரும் மேயருமான சண்.இராமநாதன் ஏற்பாட்டில் , அருளானந்தம் நகரில் உள்ள மாநகர திமுக அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று துவக்கிவைத்தார். மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மண்பானையில் சர்க்கரை பொங்கல், வென்பொங்கல் வைத்து தமிழர் திருநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. நம் பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக ஜல்லிக்கட்டு மாடுகள், குதிரை வண்டிகள், பிரமாண்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு மாடுகள், குதிரை வண்டி ஆகியவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் மயிலாட்டம், புலியாட்டம் என நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது. இதை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ரசித்து பார்த்தனர். முன்னதாக நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றிபெற்ற பெற்ற மகளிர் அணி பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சை மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளருமான சண்.ராமநாதன் செய்திருந்தார். பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டும் என்பதற்காக மாநகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த சமத்துவ பொங்கல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.