அலட்சியமும், அசட்டையும் வேண்டவே வேண்டாம்... தேசியக்கொடியை இறக்கி பத்திரமாக மடித்து வைக்க வலியுறுத்தல்
சுதந்திர தினம் முடிந்து மாலையில் பாதுகாப்பாக கொடியை எடுத்து மடித்து வைக்க வேண்டும் என்பதை மக்களும் மறந்தனர்.
போதும்... 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வீடுகள், கடைகள் என சுற்றி, சுற்றி பார்த்த அனைத்து பகுதிகளிலும் நம் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது. ஆனால் சுதந்திர தினம் முடிந்து மாலையில் பாதுகாப்பாக கொடியை எடுத்து மடித்து வைக்க வேண்டும் என்பதை மக்களும் மறந்தனர். அதிகாரிகளும் அசட்டையாக இருந்தனர். இதுதான் தற்போது தஞ்சை பகுதியில் பேசும் பொருளாகி விட்டது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று, நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் அரசு, தனியார் அலுவலகங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை மூன்று நாட்கள் ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. திரும்பிய இடமெல்லாம் நம் தேசியக் கொடி காற்றில் படபடவென்று பறந்து மக்கள் மனதில் நாட்டுப்பற்றை சிலிர்க்க வைத்தது.
குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து சிற்றூர்களிலும் வீடுகள் தோறும் மூவர்ண கொடிகள் கொடுக்கப்பட்டு வாசல்களில் கட்டி வைக்கப்பட்டது. அந்த கொடியை கொடுக்கும் போது மூன்று நாட்கள் கொடியை வீடுகளில், கடைகளில் ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து இதுகுறித்து விளம்பரங்களும் செய்யப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படுவதற்கு முன்பாக எப்படி அவிழ்த்து மடித்து பத்திரப்படுத்தி மரியாதையாக வைக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு சரியாக தெரிவிக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்னும் கூட பல இடங்களில் கடைகளில் கொடிகள் இருப்பதை காண முடிந்தது. ரோந்து சென்ற போலீசார் இதை பார்த்து தேசியக் கொடியை அவிழ்த்து பத்திரமாக மடித்து வைக்க கூறிய சம்பவங்களும் நடந்தேறின. தஞ்சாவூரில் பல இடங்களிலும் தேசியக்கொடி இன்னும் பறக்க விடப்பட்டு கொண்டிருக்கிறது.
தஞ்சை கரந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட கரந்தை பகுதியில் பல இடங்களிலும், பள்ளியக்ரஹாரம் போன்ற பகுதிகளில் கடைகள், வீடுகளில் இன்னமும் தேசியக்கொடி பறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடியை கொடுத்து கொடிக்கு மரியாதை ஏற்படுத்த உழைத்தவர்கள் அந்த கொடிக்கு அவமரியாதை ஏற்படாமல் பார்த்து அவிழ்த்து பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தியாகிகள் தரப்பில் கூறியதாவது: தேசியக்கொடிக்கு உள்ள மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும். இத்தனை மணிக்கு கொடியை ஏற்ற வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடியை கீழிறக்க வேண்டும். கொடி வணக்கம் செலுத்த வேண்டும் போன்ற பல நெறிமுறைகள் உள்ளது. அதை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசியக்கொடி என்பது வெறும் துணி அல்ல என்பதை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக விடுதலை வீரர்கள் தங்களின் சுவாசத்தை விட்டு பெற்றுக் கொடுத்த விடுதலையை நாம் போற்றி காக்க வேண்டும். அந்த வீர மறவர்களின் தியாகத்தை நினைவு கூறும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் தான் சுதந்திர தினம். அதன் வெளிப்பாடாக மரியாதையோடு நடத்த வேண்டிய கொடி தான் நமது தேசியக்கொடி என்பதை மக்கள் புரிந்து உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
சுதந்திர தினம் முடிந்து மூன்று நாட்கள் ஆன பிறகும் இன்னுமும் பல இடங்களில் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில இடங்களில் கயிறுகள் அவிழ்க்கப்பட்டு அப்படி தேசியக் கொடி விடப்பட்டுள்ளது. இந்த செயல் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யப்படும் நிகழ்வாகும்.
கொடியை அவிழ்த்து படுக்கை வசத்தில் வைத்து முதலில் ஆரஞ்சு நிறத்தை உள்பக்கம் மடித்து, அதன் பிறகு பச்சை நிறத்தை மடித்து, வெள்ளை நிறத்தில் அசோகச் சக்கரம் தெரியும்படியாக வைத்து வலது புறமும் இடது புறமும் மடித்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இதுவே சரியான பாதுகாப்பான செயல். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.