பஸ்சை வழிமறித்து அட்டூழியம்... டிரைவரை மிரட்டிய வாலிபர்கள் மீது பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு
தொடர்ந்து பஸ்சிற்குள் ஏறி உத்தாணி கிராமத்தில் பஸ் நிற்காமல் சென்றால் கொன்று விடுவோம் எனவும், பஸ்சை அடித்து உடைத்து விடுவோம் எனவும் கூறி மிரட்டல் விடுத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் பஸ்சை வழிமறித்து தகராறு செய்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிற்கச் சொல்லி இளைஞர்கள் சிலர் தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு தனியார் பஸ் சென்றது. அப்போது அந்த தனியார் பஸ்சில் இரண்டு வாலிபர்கள் ஏறியுள்ளனர். பின்னர் உத்தாணி கிராமத்தில் பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அப்போது பஸ் டிரைவர் அங்கு நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி அதற்கு அடுத்த நிறுத்தத்தில் அந்த 2 வாலிபர்களை இறக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த பஸ் தஞ்சாவூருக்கு சென்று விட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது பாபநாசம் அருகே உத்தணி நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். பஸ்சை டிரைவர் நிறுத்தியவுடன் உத்தாணியில் ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று கேட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பஸ்சிற்குள் ஏறி உத்தாணி கிராமத்தில் பஸ் நிற்காமல் சென்றால் கொன்று விடுவோம் எனவும், பஸ்சை அடித்து உடைத்து விடுவோம் எனவும் கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால், அந்தப் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சை வாலிபர் வழிமறிப்பது மற்றும் பஸ்சிற்குள் ஏறி தகராறு செய்வது என அனைத்து சம்பவங்களும் பஸ்சில் இருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ் நின்றுதான் செல்ல வேண்டும் என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு வாலிபர்களின் செயல்பாடு இருந்ததை வீடியோவில் கண்டு அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் இறுதி ஊர்வலம் சென்றபோது பஸ் டிரைவர் ஹாரன் அடித்தார் என்று பட்டுக்கோட்டை சென்று விட்டு திரும்பி வந்த பஸ்சை குடிபோதையில் வழிமறித்து டிரைவரை ஆபாசமாக பேசி வாலிபர்கள் தாக்க முயன்றனர். அப்போது அந்த பஸ்சில் வந்த பெண் போலீஸ் இதை தட்டிக் கேட்டார். அப்போது அவரையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி தாக்கவும் முயன்ற சம்பவம் நடந்தது. இந்த வீடியோவும் வைரலான நிலையில் பெண் போலீசாரின் புகாரின் பேரில் தஞ்சாவூர் தாலுகா போலீசார் உடன் நடவடிக்கை மேற்கொண்டு போதையில் தகராறு செய்து ஆபாசமாக பேசி தாக்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான பயணம் என்று நம்பும் பயணிகள் இவ்வாறு பஸ்சை மறிப்பது, பஸ்சில் ஏறி ரகளை செய்து போன்ற சம்பவங்களால் அச்சப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று தெரிவித்தனர்.





















