சர்வதேச யோகா தினம்... தஞ்சை, கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

தஞ்சாவூர்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்
உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலில் ஒன்றிய தொல்லிய துறை ஏற்பாட்டில் பெரியகோயில் வளாகத்தில் புல்தரையில் மாணவ, மாணவியர் சர்வதேச யோகா தினத்தையொட்டி பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இதேபோல் தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதையடுத்து மத்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அடிப்படையில் யோகா தினம் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞர் பி கே சம்பந்தன் கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு புஜங்காசனம், சிரசாசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர், இந்நிகழ்ச்சியில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் வாசகத்தை கொண்டு ஏராளமான நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடந்தது. யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் யோகா தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. இந்த இடங்களில் எல்லாம் இன்று காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடந்தது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அன்பரசு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கிட்சிங் கலந்து கொண்டார். தொடர்ந்து யோகாசனம் செய்வது குறித்தும், நன்மைகள் குறித்தும், உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளின் யோகாசன நிகழ்வு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் யோகா பயிலும் பயனாளிகளும் சிறப்பு யோகா நடனம் செய்தனர். ஏற்கனவே ஏற்பாடுகளை டாக்டர்கள் பழனிச்சாமி, ராதாமணி, சுகந்தி, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு கல்வி வேலைகளை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கும்பகோணம் கோட்ட தபால் அலுவலகம் சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தலைமையில் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் பேசினார். இந்த நிகழ்வில் யோகா மாஸ்டர் சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் செய்தனர்.





















