ஓன்ஜிசி மீண்டும் எண்ணெய் கிணறு பணி தொடங்க வேண்டும்; சிபிஐ, சிபிஎம் சார்ந்த தொழிற்சங்கத்தினர் திருவாரூரில் பேரணி
ஓஎன்ஜிசிக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும்.
ஓஎன்ஜிசி மீண்டும் எண்ணை கிணறு பணிகளை தொடங்க வலியுறுத்தி சிபிஐ, சிபிஎம் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் திருவாரூரில் பேரணி நடத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பு புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கோ அல்லது ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற எரிவாயு எடுப்பதற்கு தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் விபத்தால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட பெரியகுடி எண்ணெய் கிணற்றை நவீன முறையில் மூடுவதற்கு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் அந்த எண்ணெய் கிணற்றில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக கூறி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் நவீன முறையில் இந்த கிணறு மூடப்படும் என ஓஎன்ஜிசி நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் ஓஎன்ஜிசிக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும், 40 ஆண்டு காலமாக ஓன்ஜிசியை நம்பி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும். நாட்டின் மகா ரத்னா அந்தஸ்தை பெற்றுள்ள ஓன்ஜிசியின் தேசிய நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும், விவசாயிகளை பாதுகாக்கின்ற போர்வையில் அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கைக்கூலியாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர முயற்சி எடுக்கும் தமிழக முதல்வர் நீண்ட காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு உத்தரவாதம் கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் தலைமையில் 700க்கும் மேற்பட்டோர் திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றடைந்தனர். அதன் பின்னர் நாகை எம்பி செல்வராஜ் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மாலிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதிக்க கூடாது புதிய கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் புதிய எண்ணை கிணறு அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.