வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு - தஞ்சாவூரில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு
’’தஞ்சாவூர் மாவட்டத்தில் 195 மழை வௌ்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என கண்டறியப்பட்டு அந்த இடத்திற்கு தேவையான நிவாரண மையங்கள் அமைப்பு’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் கே.பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, மாவட்ட கண்காணிப்பு மற்றும் அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.விஜயகுமார், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பான அனைத்து அரசு அலுவலகம், மாவட்ட கலெக்டர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டம் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சிதுறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை, வருவாய்துறை, தீயணைப்புதுறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கால்நடைபராமரிப்புதுறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்புதுறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அனைத்து வகையிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 195 மழை வௌ்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என கண்டறியப்பட்டு அந்த இடத்திற்கு தேவையான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் 1169 கிலோ மீட்டர் நீலமும், மாநகராட்சி, நகராட்சி மூலமாக 1069 கிலோமீட்டர் நீளமும் தூரத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு 5,82,960 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
முன்னதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.விஜயகுமார், திருவையாறு மற்றும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோணகடுங்கலாற்றில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் நாகத்தி ஊராட்சி மற்றும் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் வௌ்ளாம்பெரம்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி கொள் முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் தன்மை குறித்து கருவி மூலம் பரிசோதனை செய்யும் பணியினையும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் நாகத்தி ஊராட்சியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்பது குறித்தும் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் பணிகளையும் பார;வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், எஸ்பி ரவளிப்ரியாகந்தபுனேனி, கூடுதல் ஆட்சியர் வருவாய் சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், துணை ஆட்சியர் பயிற்சி கௌஷிக் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்த கொண்டனர்.