இனி க்யூவே கிடையாதுங்கோ... செல்போனிலேயே எடுத்துக்கலாம், முன்பதிவு இல்லாத டிக்கெட்..
வேலை, படிப்பு என்று பரபரப்பான சூழலுக்கு நாம் மாறிவிட்டோம். அதற்கு உதாரணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க காத்திருக்கும் கூட்டம்தான்.
தஞ்சாவூர்: வேலை, படிப்பு என்று பரபரப்பான சூழலுக்கு நாம் மாறிவிட்டோம். அதற்கு உதாரணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க காத்திருக்கும் கூட்டம்தான். ஆனால் இனி நீங்க விநாடி நேரத்தில் உங்கள் செல்போனிலேயே முன்பதிவு இல்லாத டிக்கெட்டை எடுத்துக்கிட்டு ஜாலியாக போகலாம்.
பிரத்யேக செல்போன் செயலி பற்றி விழிப்புணர்வு..
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பிரத்தியேக செல்போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட் எடுப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரயில் நிலைய வணிக ஆய்வாளர் அகிலன், உதவி நிலைய மேலாளர் டேனியல், வணிக கண்காணிப்பாளர் தங்க மோகன், கமர்சியல் கிளார்க் நெல்வின் ஜெயக்குமார் ஆகியோர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
யூடிஎஸ் என்ற செல்போன் செயலிதான் அது..
UTS என்ற அந்த செல்போன் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் புதிதாக கணக்கு எண் ஆக்டிவேட் செய்து பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். முக்கியமாக மொபைல் நம்பர் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அதில் உள்ளே சென்றால் திரையில் வரும் விவரங்களை பார்த்து முன்பதிவு இல்லாத டிக்கெட், ப்ளாட்பார்ம் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு விவரங்கள் அதில் அடங்கியிருக்கும்.
முன்பதிவு இல்லாத டிக்கெட்டை கூட எடுக்கலாம்..
வீட்டிலிருந்து புறப்படும் போது கூட முன்பதிவு இல்லாத டிக்கெட்டை, எடுக்கலாம். ஆனால் ரயில் நிலையத்திலிருந்து 30 மீட்டருக்குள் டிக்கெட் எடுக்க முடியாது. எத்தனை பேர் பயணம் செய்கிறோம். அதில் குழந்தைகள் பயணம் செய்கிறார்களா என்பது உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கூகுள் பே , பேடிஎம் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
சீசன் டிக்கெட் கூட எடுக்க முடியும் தெரியுங்களா?
அதன் பின்னர் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்ய வரும்போது நாம் பதிவு செய்துள்ள விவரங்களை காண்பிக்க வேண்டும். ஆனால் நாம் ஒருவருக்கு பதிவு செய்து அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப முடியாது. அது செல்லுபடி ஆகாது. மேலும் இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட் பதிவு செய்யலாம். அவற்றை புதுப்பித்தும் கொள்ளலாம். இப்படி ஏராளமான வசதிகளை கொண்டு அட்டகாசமாக செயல்படுகிறது இந்த செயலி.
இது தவிர ரயில் நிலையத்துக்குள் வந்தும் இந்த செயலியை திறந்து அங்கு ஒட்டப்பட்டி இருக்கும் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தும் டிக்கெட் நாமே பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பதிவு செய்யும்போது நேரம் மிச்சமாகும். கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயிலை பிடிக்கலாம். அதுமட்டுமல்ல. எந்த ரயில் எத்தனை மணிக்கு என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற ஏராளமான வசதிகளை இந்த செயலி தன்னுள் வைத்துள்ளது.
பயணமுறையை எளிமையாக்கும் செயலிங்க இது..
இந்த UTS மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்களது பயண முறையை எளிமையாக்குங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பேராசிரியர் திருமேனி, வக்கீல் பைசல் அகமது, தஞ்சை ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரஜினி கணேசன், முரளிதரன், முத்துராமலிங்கம், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.