புதிய வகை கொரோனா தமிழகத்திற்கு வரவில்லை, இனியும் வராது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 69 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்துள்ளார்.
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 69 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் ஒரு லட்சத்து 31,000 பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இன்று விடுபட்டவர்களுக்கு வரும் 24 -ஆம் தேதி மீண்டும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றது. இந்த பணிகளை மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் துவங்கி வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா. முருகன், பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க இது தொடர்பாக வழக்கு ஒன்று நிழுவையில் உள்ளது. அந்த வழக்கு முடித்த உடன் விரைவில் அனைத்து காலி இடங்களும் ஒரே நாளில் நிரப்பப்படும், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டது, விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 2028 -ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளது, இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும், விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும், கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த 9 ஆண்டு காலத்தில் மருத்துவத்துறை சார்பாக 239 விருதுகள் சுகாதாரத் துறைக்கு பெறப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த ஓராண்டில் மட்டும் அதே 239 விருதுகள் தமிழக சுகாதாரத் துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள அன்றைய தினத்தில் நீட் தேர்வு விளக்கு கேட்டு மாவட்ட தலைநகரங்களில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது எங்கள் போராட்டத்தில் அதிமுகவினர் வந்து கலந்து கொள்ளப் போகிறார்களா என்ன என்று எதிர் கேள்வி எழுப்பினார். தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான எரிஸ் குறித்து கேள்விக்கு அது தமிழகத்தில் பரவவில்லை எனவும் இனிய பரவாது அதனால் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்தார்.