கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட நாம் தமிழர் கட்சி முடிவு
’’நாங்கள் கேட்டது தனி மாவட்டம், கிடைத்தது மாநகராட்சி; இதனால் வரிகளால் மக்கள் திண்டாடுவார்கள்’’
கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தஞ்சையை பிரித்து கும்பகோணம் தனிமாவட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உறுதியளித்தார். ஆனால் அதன் பின் இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கோலம் வரைதல், மனு அனுப்புதல் போன்ற பல்வேறு விதமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதங்களில் கும்பகோணம் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தெரிவித்தார். ஆனால் பதவி ஏற்று, சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் பகுதி பொது மக்கள் திரட்டி, சென்னையில் போராட்டம் நடத்த, கும்பகோணம் புதிய மாவட்ட கோரும் ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு செய்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தின் போது, கும்பகோணம் மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் கும்பகோணம் பகுதி மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நாம்தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கும்பகோணம் தொகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கண்டன உரையாற்றினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி முழக்கமிட்டனர். இது குறித்து தொகுதி செயலாளர் ஆனந்த் கூறுகையில்,
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றோம். பல்வேறு கட்சி, அமைப்புகள் சேர்ந்து குழு அமைத்து சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கிணங்க போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். அதற்குள் கடந்த 24ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழக முதல்வர், கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் கும்பகோணம் மக்களாகிய நாங்கள் கேட்டது தனி மாவட்டம், கிடைத்தது மாநகராட்சி. இதனால் வரிகளால் மக்கள் திண்டாடுவார்கள்.
கும்பகோணம் பகுதி மக்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு மாநகராட்சி என வெற்று அறிவிப்பினை வெளியிட்டிருக்கிற திமுக அரசின் வஞ்சகச் செயலை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 110 விதியின் கீழ் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.