தஞ்சையில் பரபரப்பு: மகனின் சிகிச்சை வேண்டி தாய் தீக்குளிக்க முயற்சி! கலெக்டர் அலுவலகத்தில் சோகம்
எங்களை ஏமாற்றி எனது மகனின் வலது கால் முட்டியை அகற்றி விட்டனர். அதன் பின்னர் தற்போது வரை பல இடங்களில் மருத்துவம் செய்தும் என் மகனை நடக்க வைக்க முடியவில்லை.

தஞ்சாவூர்: கால் முட்டி பாதிப்புக்கு சிகிச்சை பெற்றும் நடக்க முடியாமல் தவிக்கும் தனது மகனுக்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாய் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த செல்வம் மனைவி சாரதா (42) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று சாரதாவிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்து உடல் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாரதா, தனக்கு இரண்டு மகள் , 1 மகன் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது மகன் தற்போது பாலிடெக்னிக் படித்து வருகிறார். தனது மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கீழே விழுந்ததில் வலது முட்டி அடிபட்டது. இதையடுத்து எனது மகனை திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
ஆனால் அங்கு எங்களை ஏமாற்றி எனது மகனின் வலது கால் முட்டியை அகற்றி விட்டனர். அதன் பின்னர் தற்போது வரை பல இடங்களில் மருத்துவம் செய்தும் என் மகனை நடக்க வைக்க முடியவில்லை. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் வைத்து மகனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை . இதனால் விரக்தி அடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
.
இதையடுத்து தொடர்ந்து சாரதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவருக்கு இதுபோன்று மண்எண்ணெய் ஊற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை அளித்து அவரது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கச் செய்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
விவசாயிகள் வேதனை மனு
நடப்பு குறுவை சாகுபடியில் புகையான் பூச்சியின் தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட வேளாண் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் மனு அளித்தனர்.
அந்த விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கோவில்பத்து, கங்கை சமுத்திரம், நாச்சியார்பட்டி பகுதியில் உரிய காலத்தோடு குறுவை நெல் சாகுபடி செய்துள்ளோம். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிரை புகையான் பூச்சி கடுமையாக தாக்கி மகசூல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. பூதலூர் பகுதியில் சுமார் 1600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்து உள்ளோம். சில வயல்களில் அறுவடை முடிந்துள்ளது. ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை தான் விளைச்சல் வந்துள்ளது.
இன்னும் அறுவடை ஒரு வாரத்தில் நிறைவடையும் நிலையில் பூச்சி தாக்குதலால் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட வேளாண் அலுவலர்கள் விரைந்து நேரில் பார்த்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















