நீட் தேர்வை நீக்க எங்களுடன் சேர்ந்து குரல் கொடுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகளும் எங்களுடன் சேர்ந்து நீட் தேர்வை நீக்க குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தல்
தஞ்சாவூர்: எதிர்க்கட்சியாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். நீட் பள்ளி மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். நீட் என்பதை நீக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் ஆகிய நீங்களும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தமிழகத்திற்கு மட்டுமானது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கான குரலாக இந்த உண்ணாவிரதம் ஒலிக்கும். கொரோனா காலத்தில், பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், கொரோனாவிற்கான பயிற்சி மையங்கள் நலிவடையாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. மத்திய அரசு நீட் பயிற்சியை வணிகமாக பார்க்கிறது.
எங்களைப் பொறுத்தவரை மாணவச் செல்வங்களில் உயிர் முக்கியமாகவும், ப்ளஸ் டூ முடித்தவுடன் இரண்டு மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி முடித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்கிற மன அழுத்தத்தை தரக்கூடாது என நினைக்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் பொறுத்த வரை கடனை வாங்கி ஒன்றரை முதல் மூன்று லட்சம் வரை கட்டி நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு படிக்கிறார்கள். அந்த முறை வெற்றி பெறவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக குடும்பத்தையும் பாதிக்கின்ற மனநிலை ஏற்படுகிறது. அரியலூர் மாணவி அனிதா ஆரம்பித்து, மாணவர் ஜெகதீஷ் அவரது தந்தை உள்ளிட்ட பலரை நாம் இழந்து உள்ளோம். கவர்னர் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஒவ்வொரு முறையும் மைக்கை பிடித்து பேசி வருகிறார்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் முரண்பாடு சிந்தனை கொண்டவராக கவர்னர் செயல்படுகிறார். மத்திய அரசுக்கும் அவர்களின் கைபாவையாக இருப்பவர்களுக்கும் மனிதாபிமானம் என்பது இல்லாமல் போய்விட்டது. நீட் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ஆதரிக்கும் நபர்களைதான் மத்திய அரசு வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். நீட் பள்ளி மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்,மன அழுத்தம் தராமல் இந்த பிள்ளைகளுக்கு, அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, நீட் என்பதை நீக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் ஆகிய நீங்களும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.