Mayiladuthurai: கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி!
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மூன்று ரயில் சேவைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் இருந்து, கொரோனா காலத்தில் விழுப்புரம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பாசஞ்சர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியதில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் இயங்காமல் குறிப்பிட்ட அளவு இரயில்கள் மட்டுமே இயங்கியது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் சங்கம் ஆகியோர் கோரிக்கை வைத்து பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேசஞ்சர் ரயில்கள் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயிலாக படிப்படியாக துவக்கப்பட்டு வருகின்றது. அதன்படி மயிலாடுதுறையில் இருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விழுப்புரம் பாசஞ்சர் ரயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை மீண்டும் துவங்கியது. இன்று காலை ஆறு மணிக்கு மயிலாடுதுறை ஜங்ஷனில் புறப்பட்டது. காலை ஆறு மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 9 மணி 5 நிமிடத்திற்கு விழுப்புரம் சென்றடைகிறது. இதற்கு கட்டணமாக அறுபது ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் என்பதால் பொதுமக்களுக்கு போதிய தகவல் தெரியாததால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. இதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் இன்று காலை 11:35 மணிக்கு திண்டுக்கல் சிறப்பு விரைவு ரயில் ஆக இயக்கப்படுகிறது. இதுபோல் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு மாலை 6.15 மணிக்கு இன்று முதல் இயக்கப்படுகிறது.
திண்டுக்கல் வரை இயக்கும் ரயிலை, மீண்டும் திருநெல்வேலி வரை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியதை அடுத்து ரயில் பயணத்தை சார்ந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள் மட்டுமின்றி, இந்த ரயில்கள் செல்லக்கூடிய மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்