வக்கில் நோட்டீஸ் அனுப்பிய காதலன் - மனமுடைந்த காதலில் தற்கொலை முயற்சி
’’காதலன் திருமணம் செய்ய மறுத்து வக்கீல் நோட்டிஸ் அனுப்பியதால் காதலி எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி’’
மயிலாடுதுறை மாவட்டம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முத்தையன் என்பவரின் மகள் 30 வயதான துர்க்காதேவி. முதுகலை பட்டதாரியான இவர், ஆடிட்டர் ஒருவரிடம் தணிக்கை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மயிலாடுதுறையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் பேசி திருமண நிச்சயம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென அதிக வரதட்சணை கேட்டு துர்காதேவியை திருமணம் செய்ய ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்தாக துர்க்காதேவி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ராஜேஷ் மயிலாடுதுறையில் இருந்து பணிமாறுதலாகி செம்பனார்கோவில் வங்கிக்கிளையில் பணியாற்றி வரும் சூழலில், அங்கு அவரை பார்க்க சென்ற துர்காதேவிக்கும், ராஜேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருதரப்பினரையும் காவல்துறையினர் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பல ஆண் நண்பர்களுடன் பேசியதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், என் மூலம் எனது நண்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் உள்ளதாகவும், கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்கும் படியும் துர்காதேவிக்கு ராஜேஷ் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் மனமுடைந்திருந்த துர்க்காதேவி வக்கீல் நோட்டிஸ்சை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த எறும்பு மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். நான்கு ஆண்டுகளாக காதலித்து திருமணம் நிச்சயம் செய்ய இருந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்தினர் வரதட்சணை கேட்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்கள் கூறி திருமணத்தை தட்டி கழிப்பதாகவும், இதனால் தன் மகள் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கு காரணமான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜேஷ் தரப்பினர் கூறுகையில் துர்காதேவி மீது இருந்த காதலால் அவரது குடும்பத்திற்கு வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் காதலி துர்க்காதேவியிடம் மனக்கசப்பு ஏற்பட்டு துர்க்காதேவி ராஜேஷ்சை தவிர்த்ததாகவும், பணத்திற்காக ராஜேஷ்சிடம் பழகியதாகவும் கூறினர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050