மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு
மூன்று நாட்களாக உணவு வரவில்லை என சமூக ஆர்வலரை தேடி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட ஆதரவற்ற முதியவர்கள்.
![மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு Mayiladuthurai Social activist attacked for asking for mamool Appeal to collector amid police open arms TNN மாமூல் கேட்டு தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் - போலீஸ் கைவிரித்த நிலையில் கலெக்டரிடம் முறையீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/8d5376366b7cc86f9b76b4217a3e89eb1701845718866733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன், அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவறறவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார்.
கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். மேலும் இவரது சேவையை பாராட்டி கோயம்புத்தூர் கோல்டன் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் பாரதி மோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் மாலை நேரத்தில் அவரது வாகனத்தை வழிமறித்த சிலர் மாமூல் கேட்டு வாகனத்தை அடித்து உடைத்ததோடு, வாகனத்தில் இருந்த சிலரை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த பாரதி மோகன், சகோதரர் தனுஷ்கோடி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தாக்குதல் குறித்து பெரம்பூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதும் தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு புகார் அளித்த பாரதிமோகன் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனக் கூறி காவல் துறையே நடவடிக்கை எடுக்கவில்லை கை விரித்து விட்டதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நேரில் சந்தித்து பாரதி மோகன் குடும்பத்தினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தாங்கள் மீண்டும் சேவை செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் கைகூப்பி கும்பிட்டு மன்றாடி கேட்டனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாரதிமோகன் அறக்கட்டளை தினமும் சாலையோரங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு உணவு அளித்து வந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக உணவு வரவில்லை என தவித்த ஆதரவற்றோர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று விசாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தினமும் ஆதரவின்றி தவிப்போர்களுக்கு உணவு அளிப்பார்கள், அவர்கள் நான்கு நாட்களாக எங்களுக்கு உணவு தரவில்லை, எங்களைக் காணவும் வரவில்லை, அவர்களைப் பார்த்து என்ன பிரச்சனை என்று விசாரித்து செல்வதாக கூறினர்.
பிறகு பிரச்சினையை கேட்டு கலெக்டரிடம் நாங்களும் மன்றாடி கேட்கிறோம் எங்களைப் போன்றவர்களுக்கு அவர்கள் உணவு அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று கேட்கும் போது எங்களது மனசு தாங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஆதரவற்றவர்களுக்கு பாரதி மோகன் அறக்கட்டளை உணவு அளிக்க வேண்டும் என்று ஆதரவற்றவர்கள் கேட்டுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)