மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - நோயாளிகள் அவதி
’’மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும், இல்லாவிடில் வேலை விட்டு போய்விடுமாறு அலட்சியமாக பேசுவதாகவும் புகார்’’
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மட்டும் 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 155 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 648 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மாவட்டத்தில் 315 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக டெக்னீஷியன் உட்பட 28 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை என கூறப்பபடுகிறது. மேலும் இன்று காலை முதல் இவர்கள் 28 பேருக்கும் உரிய பணி வழங்கபடவில்லை. இதனால் பாதிக்கபட்ட செவிலியர்கள் தங்களுக்கு இதுநாள் வரை பணியாற்றி ஊதியத்தை வழங்க வேண்டும், தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
அதே போல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை இன்று முதல் 12 மணி நேரம் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதனை ஏற்க மறுத்து சுகாதார பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும், இல்லாவிடில் வேலை விட்டு போய்விடுமாறு அலட்சியமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டிய பணியாளர்கள் வழக்கமான பணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.