(Source: ECI/ABP News/ABP Majha)
தற்காலிகமாக 'செட் அப்' செய்து தூய்மை பணிகள்....அடுத்தடுத்து ஷாக் கொடுத்த ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது சொன்ன திசையில் செல்லாமல் எதிர் திசையில் சென்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக கடந்த வாரம் ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதலே மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வு பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மயிலாடுதுறை நகரில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது, சாலைகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீர் மற்றும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடும் தான். இதனை தடுக்கும் வகையில் 'தூய்மை நகரம் மயிலாடுதுறை' என்ற பெயரில் சுகாதாரப் பணிகளை துவங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒரு சொட்டு சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடமல், ஆள்நுழைவு தொட்டியில் இருந்து வழிந்து ஓடும் இடங்களில் கழிவு நீரை அப்புறப்படுத்தவும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நீர்வள ஆதார துறையின் சார்பில் காவிரி ஆற்றில் தூர்வாரும் பணியை காவிரி பாலத்தின் மேற்கு புறம் உள்ள படித்துறை விஸ்வநாதர் கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் காலை முதல் பொதுப்பணித்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆய்வுக்கு வந்தபோது 'டேக் டைவேர்ஷன்' என்று அதிரடி காட்டி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி காவிரி பாலத்தின் கிழக்கு திசையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு இருந்த அதிகாரிகள் திகைத்து நின்றனர். அந்த பகுதிக்கு ஆட்சியர் வருவார் என அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்காததால், அப்பகுதிகளில் தூய்மை பணிகள் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடாக காட்சியளித்தது. இதையடுத்து, அங்கு துணி கழிவுகளை கொட்டி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அங்கு மேலும் பதற்றம் கூடியது.
காவிரி புனித துலா கட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடுவதும், திதி கொடுப்பதுமான புண்ணிய இடத்தில் குடிமகன்கள் மது பாட்டில்களை குடித்துவிட்டு உணவு பொட்டலங்களை கீழே வீசி சென்றும் கிடந்தது ஆட்சியரை முகம் சுளிக்க வைத்தது. காவிரி ஆறு சாக்கடை போல் மாறி வீடுகளில் கழிவு நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் கழிவு நீரை ஆற்றில் திறந்து விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த இடத்தில் கீழே கிடந்த காலி மதிபாட்டில்கள் மற்றும் மீந்து போன உணவு பொட்டலங்களை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று கால்களால் அவற்றை நகர்த்தியபடி அப்புறப்படுத்தினார். இருந்தாலும் விதிவசத்தில் அவர் அப்புறப்படுத்திய இடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வை சென்று விழுந்தது. ஏன் இவ்வளவு குடிகாரர்கள் இங்கே குடித்துவிட்டு காலி பாட்டிலை வீசி சென்று இருக்கிறார்கள்? உடனடியாக இரவு நேரத்தில் காவல் துறை ரோந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் வருவது போல் அதிகாரி பூனை நடை நடந்து மது பாட்டில்களை அப்புறப்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மாட்டிக் கொண்டது அப்பகுதியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியது. பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நகராட்சி கழிப்பிடத்திற்கு மீண்டும் சென்று, தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
வாய்வார்த்தையாக வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் பணிகள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்று நேரில் சென்றும் கண்காணிக்கும் மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்களிடம் பாராட்டையும், அதிகாரிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் மகாபாரதி , நகரத்தின் தலையாய பிரச்சனையான தூய்மையின்மையை சரி செய்ய களம் இறங்கி உள்ளார். இதுவரை இவரது செயல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. இவரின் அடுத்ததுதடுத்து கவனமும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த முன்னெடுப்பும் எது குறித்து இருக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.