பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு; மண்ணை வாரி சாபம் விட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கியதில் முறைகேடு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மண்ணை வாரி தூற்றி சாபம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த ஆண்டு 2020 - 21 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16 கோடியே 17 லட்சம் ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தொடர்ந்து மழை வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தியதில் புள்ளியியல் துறை மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், 281 வருவாய் கிராமங்களில், 53 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த விவசாயிகள்,
228 கிராமங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை, அரசு மற்றும் விவசாயிகள் பிரீமியம் தொகையாக 150 கோடி ரூபாய் கடந்த ஆண்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பணம் கட்டிய நிலையில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை புறங்கணித்து தமிழ்நாட்டில் அமைச்சர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய இருக்கைகள் வழங்கப்படாததை கண்டித்தும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தங்கள் இன்சூரன்ஸ் கட்டிய பணத்தை ஏமாற்றிய இந்த அரசு, விவசாய துறை சார்ந்த அமைச்சர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி நாசமாக போகவேண்டும் என மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா, விவசாயிகள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். அரசு, விவசாய துறை சார்ந்த அமைச்சர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி நாசமாக போகவேண்டும் என மண்ணை வாரி விவசாயிகள் இறைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்டா மாவட்டங்களுக்கு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தது.
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தனியார் வியாபாரிகள் மூலம் தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க செய்யும் வகையில் ஸ்பிக் கம்பெனி உரங்களான டிஏபி, யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தூத்துக்குடியில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் 780 டன் யூரியா, 250 டன் டிஏபி, 250 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.