கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடைசி இடத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக ஒருவருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை, அது மட்டுமின்றி மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 2 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், அதனை தொடர்ந்து சீர்காழி வட்டார அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு மாவட்டத்திற்கு ஒரு பொது மருத்துவமனை என்ற அடிப்படையில், ஒன்றிய அரசில் நிதி பெறபட்டு 46 கோடியை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மாதம் நடைபெறும் நிதி நிலை அறிக்கை அறிவிப்புக்கு பின்னர் பணிகள் தொடங்கவுள்ளது. புதிய மாவட்டம் என்ற முறையில் மாவட்டத்திற்கான தேவைகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரச்சினை, கொரோனோ தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் மக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 92 சதவீதமும், இரண்டாம் தவணை 73 சதவீதமும் செலுத்தபட்டுள்ளது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 56 சதவீதம் மட்டுமே செலுத்திக் கொண்டு தமிழகத்தில் குறைந்த அளவு செயல்பாடு உள்ள மாவட்டமாக உள்ளது மனதிற்கு குறையான செய்தியாக இருக்கிறது. தடுப்பூசி மட்டும் தான் தொற்றுகளில் இருந்து மீண்டு வர ஒரேவழி என்பதை உணரவேண்டும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவ மக்கள் தங்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உள்ளது என கருதிக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அலட்சியம் செய்வதாக கூறிபடுகிறது. ஏற்கனவே மீனவ பிரதிநிதிகளின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரதுறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவில் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியான முறையில் கவனம் செலுத்தி அடுத்து அடுத்து வரும் தடுப்பூசி முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி வெற்றிபெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் கடைசி மாவட்டமாக உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக ஒருவருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை, அது மட்டுமின்றி மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 2 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.