மனைவியை கண்டுபிடிப்பதில் காலதாமதம் - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பாஜக பிரமுகர்
மயிலாடுதுறை அருகே காணாமல்போன மனைவியை 10 மாதங்களாகியும் கண்டுபிடித்து தராத போலீசாரைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 51 வயதான முல்லைநாதன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ளார். இவரும், சீர்காழியை சேர்ந்த 50 வயதான ஜெயஸ்ரீ என்பவரும் காதலித்து கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முல்லைநாதன் தேர்தல் பணி தொடர்பாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். ஏப்ரல் 1-ஆம் தேதி முல்லைநாதன் தனது மனைவி ஜெயஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முல்லைநாதன் உடனடியாக கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜெயஸ்ரீயை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவையும் காணவில்லை.
இதனையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தனது மனைவி ஜெயஸ்ரீ மாயமானது குறித்து முல்லைநாதன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அவ்வாறு வழக்கு தொடர்ந்தும் இவரது மனைவியினை கண்டுபிடிக்க சீர்காழி காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனமுடைந்த முல்லைநாதன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பில் இருந்த காவலர்கள் தீக்குளிக்க முயன்ற முல்லைநாதனை தடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாஜக மாவட்ட நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - தஞ்சையில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது - ஒரு சிறுவன் தப்பியோட்டம்