பிப்ரவரி 21 இல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - முத்தரசன்
பிப்ரவரி 21ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோயில் நிலங்களில் குடியிருப்போர், குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் வழிபாட்டு தலங்கள், தர்மஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திரம் நிலங்களில் குத்தகை சாகுபடியாளர்கள், குடியிருப்போர் நில உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் இருந்தது போன்றே பகுதி முறையை மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர வேண்டும். கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மடங்கள், தர்மஸ்தாபனங்கள், கோயில் போன்றவற்றின் நிலங்களில் பரம்பரை பரம்பரையாக குத்தகை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் குத்தகை செலுத்தவில்லை என்றால், நேரடியாக அறநிலையத்துறைக்கு அதிகாரம் வழங்கி, நீதிமன்றம் போல அறநிலையத்துறை வழங்குகளை நடத்தி குத்தகை விவசாயிகளை வெளியேற்றக்கூடிய அபாயகரமான நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.
இம்முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். இயற்கை சீற்றம் ஏற்படும்போது விவசாயம் பாதித்தவர்கள் குத்தகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அவற்றை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 21 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோயில் நிலங்களில் குடியிருப்போர், குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். இந்நிகழ்வில் மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர் மாசிலாமணி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டருக்கு 30 ஆயிரம் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 11- ம் தேதி ஒரே நாளில் 44 செ.மீ பெய்த கனமழையின் காரணமாக சீர்காழி தாலுகாவில் பயிரிடப்பட்ட சுமார் 30 ஆயிரம் ஹெக்டர் சம்பா பயிர்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டருக்கு ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், உயிர் இழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், திமுக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவித்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் ஹெக்டருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாபெறும் கண்ட ஆர்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், கடந்த நவம்பர் மாதம் பெய்த பேய் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு தமிழக அரசு ஹெக்டருக்கு 13,500 ரூபாய் வழங்குவது கண்டனத்துக்குரியது. 2020-21 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏக்கருக்கு 30,000 ரூபாய் ஹெக்டருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அறிவித்த தொகையை தற்போது முதலமைச்சராக இருக்கும் பொழுது 30000 ரூபாய் கொடுக்காமல் 13,500 அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது.
தற்போது நாங்கள் ஏக்கருக்கு 30 ஆயிரம் கேட்கவில்லை ஹெக்டருக்கு முப்பது ஆயிரம் ரூபாய் ஆவது வழங்க வேண்டும் என வற்புறுத்தி கேட்கிறோம். கூட்டுறவு விவசாய சங்கங்கள் ஒரு ஹெக்டருக்கு 84 ஆயிரத்து 735 ரூபாய் வழங்குகிறது இதனை போல் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டருக்கு 86,574 ரூபாய் வழங்குகிற நிலையில், தற்போது இடுபொருள் நிவாரணமாக 13,500 ரூபாய் வழங்குவது மிகப்பெரிய கண்டனத்துக்கு உரியது என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர், 100 சதவீதம் பாதித்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சியாக இருந்தபோது கூறியவர் ஹெக்டருக்காவது 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.