வடியாத மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்... கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த மருங்கை மக்கள்
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 599 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட மருங்கை பகுதியில் மழை நீர் தேங்கி நின்றி வடியாமல் தொற்று நோய் பரப்பும் அபாயம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 599 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.
இதில் தனி வருவாய் அலுவலர் (நில எடுப்பு நெடுஞ்சாலைகள்) வானி, தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் சௌமியா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த குறைதீர் கூட்டத்தில் மாரியம்மன் கோவில் ஊராட்சி மருங்கை பகுதியில் கடந்த சில நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் மனு வழங்கினர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட மருங்கை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மருங்கைப் பகுதியில் மொத்தம் 15 தெருக்கள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கு உள்ள 15 தெருக்களிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
மேலும் அங்கு வடிகால் வாய்க்கால் இருந்தும் எந்த ஒரு பயனில்லாமல் உள்ளது. அந்த வடிகால் வாய்க்கால் முழுவதும் செடிகள் மண்டி தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.
அங்கு உள்ள சாலைகள் அனைத்தும் செம்மண் சாலை என்பதால் அந்தப் பகுதி முழுவதும் சேரும் சகுதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தொடர் விடுமுறை எடுத்தும் வருகின்றனர். மேலும் முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் சேறும், சகதியுமாக தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். தஞ்சை பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது இந்த பகுதியில் மின் விளக்கு இல்லாததால் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே மருங்கை பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் தார் சாலையாக மாற்றி அந்த படிகால் வாய்க்காலை தூர்வாரி மழைநீர் வடிய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.





















