தஞ்சையில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் - தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் தகவல்
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தஞ்சையில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன .
தஞ்சாவூர்: நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தஞ்சையில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும்.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்
வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் வசதி, வாக்காளர் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க ஏதுவாக சாமியானா பந்தல், முதியோர் மற்றும் பெண்கள் அமருவதற்கு ஏதுவாக இருக்கைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கக் கூடிய வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர்கள் விவரங்கள் உள்ளடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு கடந்த 01.04.2024 முதல் 13.04.2024 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டை
வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்து தங்களது வாக்கினை செலுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்காளர்கள் கீழ்கண்ட ஆவணங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்து தங்களது வாக்கினை செலுத்தலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை (நூறு நாள் அடையாள அட்டை), வங்கி அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) திட்டத்தின் கீழ் மத்திய அரசால், பாஸ்போர்ட், வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு, பென்சன் ஆவணம், மத்திய/மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்றபேரவை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை மேலவை, மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் செலுத்துவதற்கு வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை இந்திய தேர்தல் ஆணையம் அறிவத்துள்ளது.
100 சதவீதம் வாக்குப்பதிவு எட்ட பங்களிப்பு வேண்டும்
ஜனநாயகத்துக்கான சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதிலும், வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்துவதிலும் ஒவ்வொரு வாக்காளரின் அடிப்படை கடமையாகும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பீர் எனவும், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை எட்டிட பொதுமக்கள் தங்களது தேர்தல் பங்களிப்பை நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.