எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பவுண்டேசன் சார்பில் தஞ்சை மதர் தெரசா நல வாழ்வு மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
எல்.ஐ.சி. கோல்டன் ஜூப்ளி பவுண்டேசன் சார்பில் தஞ்சாவூர் மதர் தெரசா நலவாழ்வு மையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர்: எல்.ஐ.சி. கோல்டன் ஜூப்ளி பவுண்டேசன் சார்பில் தஞ்சாவூர் மதர் தெரசா நலவாழ்வு மையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான சேவைகள் செய்யும் மதர் தெரசா பவுண்டேசன்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 22 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. புனித அன்னை தெரசாவின் அன்பு வழியை பின்பற்றி பவுண்டேசன் தரமான, அதிநவீன மருத்துவம் அளைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் மதர் தெரசா நலவாழ்வு மையம் என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை
NABH தேசிய தரச்சான்றிதழ் பெற்ற இந்த மதர் தெரசா நலவாழ்வு மையத்தில் மருந்தகம், பரிசோதனை மையம், அல்ட்ரா சவுண்ட் & எஃகோ எஸ்கேன், அறுவை சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நோயாளிகளுக்கு குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை போன்ற வசதிகளுடன் மக்களின் நலன் கருதி அன்பையும், சேவையையும் அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நலிவடைந்த ஏழை, எளிய நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
இருதய நோய் மருத்துவ சிகிச்சை
இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், நுரையீரல் நோய் மருத்துவம், இருதய நோய் மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தலைசிறந்த டாக்டர்களை கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் மதிப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
இம்மையத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு எல் ஐ சி நிறுவனம் நடத்தி வரும் எல்.ஐ.சி. கோல்டன் ஜூப்ளி பவுண்டேசன் சார்பில் ரூ.10லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் எல்.ஐ.சி. பிரிவின் சீனியர் டிவிஷனல் மேனேஜர் சுஜீத் தலைமை வகித்து, எல்.ஐ.சி. கோல்டன் ஜூப்ளி பவுண்டேசன் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் பையாசிக் டிஃப்ரில்லேட்டர் , டிரெட்மில் சிஸ்டம், 3மல்டி பாரா மானிட்டர்ஸ், இசிஜி மிஷின், 360 டிகிரி ரொட்டேஷனல் ஆர்ம் போன்ற மருத்துவ உபகரணங்களை மதர் தெரசா நலவாழ்வு மையத்திற்கு வழங்கி, மையம் செய்துவரும் சேவைப்பணிகளைப் பாராட்டினார்.
இதில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள் சம்பத்ராகவன், கோவிந்தராஜ் மற்றும் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேர்மன் சவரிமுத்து சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று, நலவாழ்வு மையம் செய்துவரும் சேவைப் பணியை மேலும் நவீனமயமாக்க மருத்துவ உபகரணங்களை வழங்கிய எல்.ஐ.சி நிறுவனத்திற்கு, பவுண்டேசன் சார்பில் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் எல்.ஐ.சி. மார்கெட்டிங் மேனேஜர் சூரஜ்குமார், சேல்ஸ் மேனேஜர் குமரன், சீனியர் பிஸினஸ் அசோசியேட் நாராயணசாமி, நிர்வாக அதிகாரி (விற்பனை) ருச்சி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மற்றும் மதர் தெரசா நலவாழ்வு மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.