"மன்னார்குடி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது ஏன்?” விசாரணயில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்..!
”உரிய விதியை பின்பற்றாமல் இருந்து பட்டாசு ஆலை இயங்க தீயணைப்பு துறை அனுமதி வழங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது”
![Investigation Reveals Cause of Explosion at Mannargudi Firecracker Factory](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/fae79d785c295d8e71c0484ccc24560c1718601826970108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மன்னார்குடியில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு நேற்று ஒருவர் உயிரிந்த நிலையில், அது குறித்த விசாரணையைல் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார்குடியிலும் இயங்கும் பட்டாசு ஆலைகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரம் என்ற இடத்தில், சக்திவேல் என்பவர் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு கோயில் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்களின் போது பயன்படுத்தப்படும் வெடிகளான வான வேடிக்கை, பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வயல் வெளியில் பட்டாசு ஆலை - விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு
இந்த பட்டாசு தயாரிக்கும் பட்டறையானது, கர்த்தநாதபுரம் வயல்வெளியின் மையத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் பட்டாசு உற்பத்தி செய்யும் வானப்பட்டறையில் பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்தது. இதில், பட்டாசு நிறுவனத்தில் இருந்த சதீஷ்குமார் உடல் முழுவதும் எரிந்த நிலையில், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் சதீஸ் உயிர் இழந்தார். மேலும், செல்வகுமார் என்ற மற்றொரு இளைஞர் வலது காலில் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பயங்கர சத்தத்துடன் வெடித்த பட்டாசுகள் - அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்
பட்டாசு வெடித்த சத்தமானது, ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்டது. இதனால், அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம எடுத்தனர். அதோடு, வீடுகளில் இருந்த பொதுமக்கள் வேக வேகமாக அச்சத்துடன என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீதிகளில் வந்து விழிபிதுங்கி நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சக்திவேல் நடத்தும் பட்டாசு ஆலை - பெண்களும் பணியாற்றுகின்றனர்
இந்த பட்டாசு நிறுவனத்தை, சக்திவேல் என்பவர் நடத்தி வருகிறார். இதில் அவரது சகோதரர் சதீஷ்குமார் மற்றும் ஐந்து பெண் தொழிலாளர்கள் உட்பட ஆறு பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், சதீஷ்குமார் தனக்கு உதவியாக மற்றொரு சகோதரர் ஆன செல்வகுமார் என்பவரை மட்டும் உதவிக்கு வைத்துக் கொண்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வழக்கமான நாட்களில் நிகழ்ந்திருந்தால் உயிர் சேதம் அதிகரித்திருக்கும் எனவும், விடுமுறை என்பதால் பலரது உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
உரிய விதிகளை பின்பற்றாததால் விபத்தா ? - விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்
மன்னார்குடியில் செயல்பட்ட பட்டாசு உற்பத்தி நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்த போது, தீ உள்ளிட்ட விபத்துகள், அசம்பாவிதங்கள் ஏற்படும் போது தீயணைப்பு வாகனம் வந்து செல்வதற்கு ஏதுவாக பாதை உள்ளதா என்பதை பார்த்து அனுமதி தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை என்றும் அதோடு, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பட்டாசு ஆலை செயல்பட்டதே விபத்திற்கு காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மன்னார்குடி தாலுக்கா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தை திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)