தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
''மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது''
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக, வடிகால்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமானது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நாற்றுக்கள் அழுகி நாசமானது. மேலும் நாற்றுக்களை நடவு செய்ய முடியாமல் வீணானது. இதனை தொடர்ந்து விவசாயிகள், பாசன வாய்க்காலை மட்டும் துார் வாரி விட்டு, வடிகால் வாய்க்கால்களை துார் வாராமல் விட்டதால், வயல்களில் மழை நீர் தேங்கியது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார் வார வேண்டும், தண்ணீர் செல்ல முடியாமல் வெங்காயம், ஆகாய தாமரை கொடிகளால், தேங்கியுள்ளதை, உடனடியாக அகற்றி சீர் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறையினர், தண்ணீர் செல்ல முடியாமல் இருக்கும் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும், கண்டறிந்து அதனை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஆங்காங்கே வாய்க்கால்கள், வடிகால்களில் தண்ணீர் சீராக செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வயலில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் இருக்கும் வடிகால் வாய்க்கால்களான, தஞ்சாவூர் அருகே திட்டை வடிகால் வாய்க்காலில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு, வெங்காயத்தாமரைகள் உள்ளிட்ட செடி, கொடிகள் படர்ந்து வாய்க்காலில் மழைநீர் வடியவிடாமல் இருந்ததை கண்டறிந்து, அதனை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் செடி, கொடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இதே போல் பாபாநாசம் அருகே எடவாக்குடி பகுதியில் உள்ள புத்தார் வடிகால் வாய்க்காலையும், பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் பூங்கொடி தலைமையில் பணியாளர்கள் சீரமைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள வயல்களில் மழை நீர், வடிகால் வாய்க்காலில் வடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வடிகால் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை போர்கால அடிப்படையில், துார் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழையின் காரணமாக, வயலில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு, போர்கால அடிப்படையில் துார் வாரும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இனி வரும் நாட்களில் வடிகால் வாய்க்கால்களில் செடி கொடிகள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளனர்.