இனி வேலை தேடி பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம்.. இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்
இனி வேலை தேடி பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம். இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும், அடிப்படை வசதிகள் மேம்படும் என்பதால் செம உற்சாகத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர்: கிடைக்கப் போகுது வேலை வாய்ப்பு... இனி இல்லை பணத்தட்டுப்பாடு என்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்த மக்கள் செம குஷியில் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 200 ஏக்கரிலான தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைகிறது. இதுதான் அந்த பகுதி மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம். இனி வேலை தேடி பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம். இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும், அடிப்படை வசதிகள் மேம்படும் என்பதால் செம உற்சாகத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ஒரு மாநகராட்சி, நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 497 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 16.18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாத மாவட்டடம் என்றால் புதுக்கோட்டை மாவட்டத்தை கூறலாம் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காரமண் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழில்களையே மக்கள் சார்ந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக புதுக்கோட்டை அருகே ஒரு சிப்காட்டும், ஒரு சிட்கோவும் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
அங்கும் படிப்படியாக தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விராலிமலை அருகே நீர்ப்பழனியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சிட்கோவும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆலங்குடி அருகே வம்பன் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சிட்கோ அறிவிப்போடு நிற்கிறது.
மாவட்டத்தில் உள்ளூர் விளைபொருட்களுக்கு ஏற்ப தொழில்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பட்ட மக்களாலும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அதற்கு தகுந்தார்போல் தொழிற்சாலைகள் புதுக்கோட்டை பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை.
இந்நிலையில், புதுக்கோட்டையில் சுமார் 200 ஏக்கரில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் என அண்மையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமாங்க காரணம் இருக்கு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் உள்ளது. பாறை நிலமாகவும், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் உள்ளதால் விவசாயமும் கேள்விக் குறியாக உள்ளது. தரிசாகவும், யூகலிப்டஸ் காடாகவும் காட்சி அளிக்கிறது. ஆழ்துளை கிணறு அமைத்து பாசனம் மேற்கொள்ள முடியவில்லை. உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லாததால் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு இப்பகுதி மக்கள் தினக்கூலி வேலைக்கு செல்கின்றனர். பொருளாதார நெருக்கடி உள்ளது. மேலும், உயர்கல்விக்கும் அப்பகுதியில் வசதி இல்லாத நிலை இருந்தது.
திருச்சி, தஞ்சாவூரைச் ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் தொழில்சாலைகளால் புதுக்கோட்டைக்கு வணிக ரீதியிலான தொடர்பு இல்லை. இந்நிலையில்தான், புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.
தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தொழிற்பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பூங்கா, கந்தர்வக்கோட்டை தொகுதியில் தெம்மாவூர், வத்தனாக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த புதிய தொழிற்பூங்கா மூலம் நிறைய பேருக்கு உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் .மேலும், பொருளாதாரம், சாலை வசதிகள் மேம்படும். இதனால் இப்பகுதி மக்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

