குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் தொடக்கம் - இந்திய தூதரக அதிகாரிகள் தகவல்
ஆடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் எனக்கு வேலை பளு அதிகமாக கொடுக்கிறார்கள் மேலும் உணவு உள்ளிட்டவை கொடுக்காமல் மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள் நான் தங்கும் இடத்தில் மின்சார வசதி கூட இல்லை என்றார்.
குவைத் நாட்டில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியது. இந்திய தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கொரடாச்சேரி சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்த ராஜப்பா. இவருடைய மகன் முத்துக்குமரன் வயது 40. இவர் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துக்குமரனின் பெற்றோர் மனைவி, மகன்கள் உறவினர்கள் இந்த சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து முத்துக்குமரனின் மனைவி வித்யா கூறுகையில், “எனது கணவர் முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அதன் பின்னர் இரண்டு தடவை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது வேலை கஷ்டமாக உள்ளதாகவும் என்னை ஒட்டகம் மேய்ப்பதற்கு பாலைவனத்தில் விட்டு விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி இல்லை இதனால் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரின் உடலை பத்திரமாக மீட்டு தர வேண்டும்” என கண்ணீர் மல்க அவருடைய மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கூத்தாநல்லூர் மட்டுமின்றி லெட்சுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசே மத்திய அரசு வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரனை படுகொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவிக்கும் முத்துக்குமரனின் குடும்பத்திற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தக்க நிதியும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற போஸ்டரை அடித்து மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
இந்த நிலையில் முத்துகுமரனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூத்தாநல்லூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று கண்டன பேரணி நடத்தி கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் சொந்த கிராமத்திற்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த முத்துக்குமரன் இறப்பதற்கு முன்னால் இறுதியாக அவரது நண்பரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த ஆடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் எனக்கு வேலை பளு அதிகமாக கொடுக்கிறார்கள். மேலும் உணவு உள்ளிட்டவை கொடுக்காமல் மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள். நான் தங்கும் இடத்தில் மின்சார வசதி கூட இல்லை. இது சம்பந்தமாக என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த ஏஜென்சி ஊழியரிடம் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் நேரடியாக எம்பஸியை அணுகுவேன் என தெரிவித்துள்ளேன் என இறுதியாக அவரது நண்பரிடம் பேசி உள்ளார்.