மின்தட்டுப்பாடு இல்லையாம்... அப்போ நேரக்கட்டுப்பாடு எதற்கு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மின்வெட்டும் வந்துவிடும். இப்போது மின் வெட்டு வந்துவிட்டது.

தஞ்சாவூர்: டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினேன். இப்போதுள்ள அரசு மும்முனை மின்சாரத்தில் நேரக் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. ஆனால், மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என்றால், எதற்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்? என்று முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ., இளைய மகன் கே. இன்பன் - ரத்னா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அவர் மேலும் பேசியதாவது:
ஜெயலலிதா காலத்தில் காவிரி பிரச்னையில் நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் பங்கீடு முழுமையாகக் கிடைக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்பிரச்னையில் ஜெயலலிதா முழுமையாக அக்கறை கொண்டு, ஈடுபட்டு 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டார்.
டெல்டா பாசன விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த டெல்டா பாசன விவசாயிகளுக்கு இதுதான் உயிர் மூச்சு; இதை வைத்துதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. எனவே, டெல்டா பாசன விவசாயிகளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என பல முறை என்னை சந்தித்து காமராஜ் ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, மத்திய அரசிடம் பேசியும், போராடியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை நாங்கள் பெற்றுத் தந்தோம். விவசாயிகளைப் பாதுகாக்கக்கூடிய அற்புதமான சட்டத்தைப் பெற்றுள்ளோம். எனவே, காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டதும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பெற்றுத் தந்ததும் ஜெயலலிதாவின் அரசுதான்.
டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினேன். இப்போதுள்ள அரசு மும்முனை மின்சாரத்தில் நேரக் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. பகலில் 5 மணிநேரமும், இரவிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என்றால், எதற்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்?
திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மின்வெட்டும் வந்துவிடும். இப்போது மின் வெட்டு வந்துவிட்டது. நெற் பயிர் சிறப்பாக வளர்ந்து விளைச்சல் கொடுக்க வேண்டும். நெற் பயிர் நடவு செய்யப்பட்டவுடன் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு களை எடுப்பர். அதிமுகவில் களை எடுக்கப்பட்டு விட்டதால், அதிமுக என்கிற பயிர் செழித்து வளர்ந்து விளைச்சலை கொடுக்கும்.
சிலர் அரசியலில் சொந்த நலனுக்காக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்கிற சேவை மனப்பான்மையுடன் நம்மிடம் உள்ளனர். இங்கு தனி மனித ஆதிக்கம் கிடையாது. தொண்டர்களின் ஆதரவால் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
தொண்டர்களால் ஆளப்படும் கட்சி இது. தொண்டர்களின் உழைப்பால் மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமையும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மணமக்களுக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செüந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார். திருமண விழா நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.





















