மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: ரத்த மாதிரிகளுடன் ஊசிகள் சாலையில் கொட்டப்பட்ட சம்பவம்- தனியார் மருத்துவமனை மீது புகார்!
’’நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருந்து இந்த ஊசிகள் கொண்டு செல்லப்படவில்லை. தனியார் மருத்துவ மனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என மருத்துவ இணை இயக்குநர் விசாரணையில் தகவல்’’
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சோத்தக்குடி கிராமமும் உள்ளது. இந்தப்பகுதியில் கிராமப்புற சாலையோரத்தில் நேற்று 200க்கும் மேற்பட்ட ஊசிகள் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்தத்துடன் கொட்டப்பட்டு இருந்தது. சாலையோரத்தில் கொட்டிக்கிடக்கும் ஊசிகளை அந்த பகுதிவாசிகள் அச்சத்துடன் பார்த்து சுகாதார துறையினருக்கு தகவல் கொடுத்தனர். குறிப்பாக இந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நன்னிலம் பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அதுமட்டுமின்றி தனியார் உடல் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
ரத்தத்துடன் கொட்டப்பட்டுள்ள ஊசிகளில் இருப்பது யாருடைய ரத்த மாதிரிகள், எங்கிருந்து எடுக்கப்பட்டது, அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் இருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டு உள்ளதா, என அந்த பகுதி வாசிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது. மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய பகுதியில் இதுபோன்று ரத்தத்துடன் 200க்கும் மேற்பட்ட ஊசிகள் கொட்டிக் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி திரைப்பட பாணியில் உடல் உறுப்புகளுக்காக கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் இதுபோன்ற ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வது வழக்கம். அதுபோன்ற சம்பவங்களுக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டுள்ளனவா என பல்வேறு கேள்விகளும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. சம்பவ இடத்தில் திருக்கண்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சீலன் ஆய்வுசெய்து சுகாதார துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு கொட்டப்பட்டுள்ள ஊசிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப்புற சாலை என்பதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா கருவிகள் இல்லை. இதனைப் பயன்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரத்திலோ அல்லது பகல் வேளையில் யாரும் இல்லாத சமயத்திலோ ஊசிகளை கொண்டுவந்து வீசி சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை முதல் நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் செல்வகுமார் ஆய்வு மேற்கொண்டார்.நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருந்து இந்த ஊசிகள் கொண்டு செல்லப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion