போராட்ட களமாக மாற இருந்த தஞ்சாவூர்... இந்தி எழுத்தில் கருப்பு மை பூசி அழிப்பு
கிராமப் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை நாம் தமிழர் கட்சியிர் கருப்பு மை வைத்து அழித்தனர். கடந்த சில நாட்களாக கனல் பூமியாக மாறியிருந்த தஞ்சாவூர் சற்றே ஆசுவாசப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கடந்த ஒரு வாரமாக தஞ்சையை போராட்ட களமாக மாற்றி வந்த கிராமங்களின் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை நாம் தமிழர் கட்சியினர் கருப்பு மையால் அழித்தனர்.
சத்தமின்றி தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை தேசிய நெடுஞ்சாலை கிராமப்பலகைகள் வாயிலாக மத்திய அரசு புகுத்தி வருகிறது என்று தஞ்சை பகுதியை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சினை விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் வெடித்தது. தற்போது இதற்கு கருப்பு மை ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு இன்று வரை தமிழ்நாடு அரசும், தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தி போன்ற மற்ற மொழிகளை மக்கள் விரும்பினால் படிக்கட்டும் ஆனால் வலிந்து திணிக்க கூடாது. இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் போன்றது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களும் நடந்துள்ளன. இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்து வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி உள்ளே நுழைந்து கொண்டுதான் உள்ளது.
இதற்கு சாட்சியாக தஞ்சாவூர்- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் கிராமங்களின் பெயர்ப்பலகைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்படும். அதில் தமிழ் எழுதப்பட்டு இருந்தது. மேலும் அதன் கீழ் ஆங்கில மொழியில் கிராமத்தின் பெயர் இருந்தது. தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழியில் கிராமத்தின் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தது யார் என்ற கனல் மொழி சுழன்று அடித்தது. கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கிராமப் பெயர் பலகையில் எதற்காக இந்தி மொழியை எழுத வேண்டும். இதேபோல் பல பகுதிகளில் எழுதி அங்கெல்லாம் இந்தி மொழியில் தார் பூசி அழித்த சம்பவங்கள் நடந்துள்ளது. இது மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் சத்தமின்றி, வலுக்கட்டாயமாக மத்திய அரசு புகுத்தும் செயலாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து தோழகிரிப்பட்டி கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், கிராமங்களின் பெயர் பலகையில் தமிழ் பெயருடன் ஆங்கிலம் எழுதப்பட்டு இருந்தது. இது வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கிராமப் பெயர் பலகைகளில் இந்தி மொழியும் எழுதப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாட்டில் முக்கியமாக சுற்றுலா தலமாகவும், நெற்களஞ்சியமாகவும் விளங்கும் தஞ்சாவூர் பகுதியில் இந்தி மொழியை சைலண்டாக புகுத்தும் செயலாக உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிராமப் பெயர் பலகைகள் அனைத்திலும் இந்தி மொழியையும் எழுதி வைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். உடன் இந்தி மொழி உள்ள பெயர் பலகையை அகற்றி விட்டு பழையபடி தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ள பெயர்பலகையை அமைக்க வேண்டும் என்றார்.
இதை அடுத்து 2 நாட்களில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயி கோவிந்தராஜ் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் தெரிவித்து கண்டனக்குரலும் எழுப்பினார். தொடர்ந்து வக்கீலும், விவசாயியுமான ஜீவக்குமாரும் பெயர்ப்பலகைகளை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார். இப்படி பல்வேறு அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பி நெடுஞ்சாலையில் கிராமப் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்தை அழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பின.
இந்நிலையில் இந்த கிராமப் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை நாம் தமிழர் கட்சியிர் கருப்பு மை வைத்து அழித்தனர். கடந்த சில நாட்களாக கனல் பூமியாக மாறியிருந்த தஞ்சாவூர் சற்றே ஆசுவாசப்பட்டுள்ளது.






















