நவம்பர் 13ஆம் தேதி குரு பெயர்ச்சி - தஞ்சை மாவட்டம் தென் குடி திட்டையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
''வரும் நவம்பர் 13 ஆம் தேதி குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்''
தஞ்சாவூர் மாவட்டம், தென்குடித்திட்டை கிராமத்திலுள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் எனும் நவக்கிரஹங்களில் ஒன்றான ராஜகுரு பரிகாரத் தலத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்குடி திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை. இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிஷ்டர் மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் வசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது ஐதீகம்.
அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் நவக்கிரஹங்களில் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது. இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறது.
சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற நவக்கிரஹங்களில் ஒன்றான ராஜ குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெயர்வதை குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இதனையடுத்து தஞ்சாவூர் அருகே குரு பகவானின் பரிகாரத் தலம் என போற்றப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வசிஷ்டேஸ்வரர், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பந்தகால் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி முகூர்த்தம் செய்து நடப்பட்டது. குரு பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு இடம் பெயர்வதால், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதால், குரு பெயர்ச்சி அன்று பக்தர்களுக்கு தரிசனத்துக்கு மட்டுமே அனுப்படுவார்கள். அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் ஏதும் கிடையாது.
மேலும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. அதே போல் நவம்பர் 21 ஆம் தேதி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெறவுள்ளது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள் அதற்கான தொகையை கோயில் நிர்வாகத்தில் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பிரசாதம் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் மா.தனலட்சுமி தெரிவித்தார்.