ஆதாரங்கள் அடிப்படையில்தான் வேலுமணி வீட்டில் ரெய்டு- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விளக்கம்
ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒன்றும் தவறில்லை எனவும் அதன்படிதான் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்துள்ளது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராம புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி சேவையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் ஏழை எளிய மக்கள் என அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 172 வது ஆம்புலன்ஸ் சேவை அர்பனிப்பு நிகழ்ச்சி ஆயப்பாடியில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொருப்பாளருமான நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முஹம்மது சுல்தான் என்பவரின் குடும்பத்தார்கள் அன்பளித்த ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா,
தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது, கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு தந்திருப்பதற்கு வெள்ளை அறிக்கையே சான்று என்றும், அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் திமுகவை விமர்சிப்பதற்கு காரணம் அவர்களின் நிர்வாக சீர்கேடு பல்வேறு தரவுகளுடன் வெளிப்பட்டுவிட்டது என்ற உண்மையை மறைப்பதற்காக தான் குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி வருகின்றனர் எனவும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றன என்பது பற்றி சட்டமன்றத்தில் உள்ள தலைமை தணிக்கை ஆணையாளர் தெளிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளதாகவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கொரோனா காலகட்டத்திலும் கூட கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களுடைய நிதிகளை எல்லாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒன்றும் தவறில்லை எனவும், அந்த வகையில் தான் தற்போது உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்யவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிச்சயமாக ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொருப்பாளருமான நிவேதா முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.