தஞ்சாவூர் : உரம், விதை நெல் தட்டுப்பாடு இன்றி கிடைக்கணும்.. வலியுறுத்திய விவசாயிகள்..
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினர். அதில் உரம், விதை நெல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது..
உரம், விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்
ஜீவக்குமார்: கல்லணையை சுற்றிலும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. உடனே தண்ணீர் நிரப்ப வேண்டும். காவிரி நீரை இறுதி தீர்ப்பின்படி மாதாந்திர பட்டியல் அடிப்படையில் கர்நாடகத்திடம் இருந்து பெற வேண்டும். கூட்டுறவு கடன்கள் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். விதைநெல் அரசு டிப்போக்களில் தேவையான அளவு இல்லை. உரம், விதைநெல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் பயிர்க் காப்பீடு திட்ட பயனாளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை
தமிழக நலிவுற்ற விவசாய சங்க மாநில தலைவர் முகமது இப்ராகீம்: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு 1 மாதத்திற்கு மேலாகியும் இன்னும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. ஏரிகள், குளங்களில் தண்ணீர் இல்லை. சம்பா சாகுபடிக்கு வேண்டிய உரம், நெல் விதைகளை இருப்பில் வைக்க வேண்டும்.
கொள்ளிடம் அருகே உயர் மட்ட பாலம் அமைக்க இருப்பதால் குடிகாட்டில் இருந்து மேட்டு தெரு திருவையாறு மெயின் ரோடு வரை புதிய சாலை போடுவதற்காக நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் ஏழை எளிய மக்களின் வீடுகள் விவசாய பம்பு செட்டுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.
சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்
அம்மையகரம் ரவிச்சந்தர்: சம்பா தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும். அம்மையகரம் ஊராட்சியில் உள்ளவர்களுக்கு தனியாக கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். உன்னோடு விவசாயிகளுக்கும் விவசாயிகள் சங்க தலைவர்களுக்கும் புகைப்படம் ஒட்டி மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டை வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லும் இடங்களில் நேரடியாக புகார் தெரிவித்துள்ளனர்.
மனு நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களை வட்டாட்சியர் அலுவலகம் செல்ல அலை கழிக்கிறார்கள். எனவே மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு மனு வாங்க ஒருவரை நியமிக்க வேண்டும்.
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: தமிழகஅரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனுக்கு நிலத்தை ஏலம் விடுவது ஏற்புடையது அல்ல. இதை மத்தியஅரசு தடுத்து நிறுத்த வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம் கொண்டு வர வேண்டும்.
கல்லணைக் கால்வாயில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் விடக் வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்: தனியார் விதை விற்பனை மையங்களில் விதை நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கடைமடை வரை தண்ணீரை கொண்டு சேர்க்க விவசாயிகள் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: பாச்சூர் பகுதியில் உள்ள ஓடைகுளம், பாச்சேரி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். தடையின்றி 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.
பொன்னவராயன் கோட்டை வீரசேனன்:- நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட நெல் மூட்டையை 50 கிலோ கொண்ட மூட்டையாக கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். குறுவை நெல் கொள்முதலுக்கு கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
நிலக்கடலை விதைகளை அரசு வழங்க வேண்டும்
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பழனியப்பன்: ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் கிராமத்தில் உள்ள 2 நெடுஞ்சாலைத்துறை சாலைகள் இணைக்கும் ஊருக்குள் உள்ள 300 மீட்டர் எந்த துறையிலும் இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சேதமடைந்த சுற்றுச்சுவரை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை சாகுபடி நடைபெறுவதால் அரசே விதை கடலை விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரம் பயிர்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.