கருகும் குறுவை பயிர்களை கண்டு வேதனை... பஸ்களை மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
குறுவைப் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய. மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் தஞ்சை அருகே செல்லம்பட்டியில் பஸ்களை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்: குறுவைப் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய. மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் தஞ்சை அருகே செல்லம்பட்டியில் பஸ்களை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி பணிகளை கிடுகிடுவென்று தொடங்கினர். ஆனால் விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்து போகும் போகும் வகையில் கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தராமல் இழுத்தடித்து வந்தது.
காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வந்தன. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரை பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை தஞ்சை அருகே செல்லம்பட்டியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் சாலையில் திரண்டனர். பின்னர் அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களை மறித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில விவசாயிகள் சாலையில் படுத்து கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின் போது உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரைப் பெற்று தராத தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அந்தப் பகுதியில் வாகனங்கள் அணித்து நின்று கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாலைமறியல் செய்த விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் பெருமளவில் கருகி சேதம் அடைந்து விட்டன. கடன் வாங்கி சிரமப்பட்டு நாற்று நட்டு வளர்த்த குறுவைப்பயிர்கள் எங்கள் கண்முன்னே வாடி கருகி சேதமானதை பார்த்து கண்ணீர் வடிக்கிறோம். எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற வேண்டும். இதனால் காவிரியில் உடன் தண்ணீர் திறந்து விட்டாக வேண்டும்.
இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கடும் சேதம் அடைந்து விட்டன. அடுத்து சம்பா சாகுபடியை தொடங்கலாமா என்பதே எங்களுக்கு பெரும் கேள்வி குறியாக தான் உள்ளது. தண்ணீர் இன்றி கருகிய குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் நாளை தஞ்சை மாவட்டம் பூதலூரில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.